இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராக பணியாற்றிய ஜெய் ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக நேற்று (ஞாயிறு) டிசம்பர் 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவரான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்ததையொட்டி ஜெய் ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய ஐசிசி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஷா தனது முதல் அறிக்கையில், ஐசிசி இயக்குநர்கள் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் தனது பதவிக்காலத்தின் எதிர்கால பார்வையை வெளிப்படுத்திய அவர், உலகளவில் கிரிக்கெட்டை மிகவும் பிரபலமாக்குவதையும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதை தயார் செய்வதையும் வலியுறுத்தினார். மேலும் பெண்கள் விளையாட்டின் வளர்ச்சியை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஷா எடுத்துரைத்தார்.
இந்நிலையில் ஜெய் ஷா ஐசிசி தலைவரானதையடுத்து அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்? என்ற கேள்விக்கான பதில் எட்டப்படாமலே இருந்துவருகிறது. அடுத்த 45 நாட்களுக்குள் புதிய செயலாளரை நியமிக்க வேண்டிய காலக்கெடுவில் பிசிசிஐ உள்ளது.
ஐசிசி அரசியலமைப்பின்படி, புதிய ஐசிசி தலைவராக பொறுப்பேற்ற ஜெய் ஷா மற்ற பதவிகளிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிலையில், பிசிசிஐ செயலாளர் பதவி, ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்கள் துணைக் குழு தலைவர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் முதலிய பதவிகளை ஷா ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்ற கேள்விக்கான பதில் இதுவரை எட்டப்படாமலும், அதற்கான தெளிவான அறிகுறி கூட இல்லாமலே இருந்துவருகிறது. இந்த சூழலில் பல பெயர்கள் அடுத்த செயலாளருக்கான இடத்தில் அடிபட்டு வருகின்றன.
அந்தவகையில் ஐபிஎல் ஆளும் குழு தலைவர் அருண் துமால், பிசிசிஐயின் இணை செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் தற்போதைய பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் உட்பட பல பெயர்கள் சுற்றி வருகின்றன.
அதேபோல குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் அனில் படேல், குஜராத் கால்பந்து சங்கத் தலைவர் பரிமல் நத்வானி, மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லியின் மகனும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் ரோஹன் ஜெட்லி ஆகியோருக்கு பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் முணுமுணுப்புகள் உள்ளன. இருப்பினும் யார் அடுத்த பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்க போகிறார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
பிசிசிஐ அரசியலமைப்பின் படி, ஒரு அலுவலகப் பொறுப்பாளர் பதவி காலியாக இருந்தால், அந்த பதவிக்கான மாற்று நபர் நியமிக்கப்படாதவரை பொறுப்பை வேறொரு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால் விரைவில் பிசிசிஐ தலைவரான ரோஜர் பின்னி அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேபோல பிசிசிஐயின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து நிர்வாகிகளை உள்ளடக்கிய அபெக்ஸ் கவுன்சிலில் காலியிடம் ஏற்பட்டால், அது 45 நாட்களுக்குள் நிரப்பப்படும் என்றும் அரசியலமைப்பு கூறுகிறது. அதன்படி 2025 ஜனவரி 14ஆம் தேதிக்கு முன் அடுத்த செயலாளரைத் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பை வெளியிட சிறப்பு கூட்டம் கூட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.