india test team - ganguly bcci / pti
கிரிக்கெட்

இந்திய அணியில் ஸ்பின்னர் எங்கே? BCCI-க்கு கேள்வி எழுப்பிய சௌரவ் கங்குலி!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கையிலிருந்து வெற்றியை இந்திய அணி நழுவவிட்ட நிலையில், பிசிசிஐயை டேக் செய்து சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

Rishan Vengai

இந்திய அணியில் உண்மையான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததே வெளிநாடுகளில் டெஸ்ட் வெற்றிக்கு தடையாகும் என சௌரவ் கங்குலி BCCI-யை கேள்வி எழுப்பியுள்ளார். குல்தீப் அல்லது மானவ் சுதார் போன்ற வீரர்கள் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 368 ரன்கள் அடித்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் சதத்தின் உதவியால் 720/9 ரன்கள் குவித்து டிக்ளார் செய்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 352 ரன்கள் முன்னிலை பெற்றநிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய நிலையில் 176 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்தசூழலில் எப்படியும் இந்தியாவே வெற்றிபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மிட்செல் மற்றும் பிலிப்ஸை இந்திய பவுலர்களால் அவுட்டாக்கவே முடியவில்லை. இறுதியில் இரண்டு அணி வீரர்களும் கைக்குலுக்கி கொண்டனர்.

இந்தியா டெஸ்ட் அணி

இந்நிலையில் ஆடும் லெவனில் சிராஜ் மற்றும் ஜடேஜா இருவரும் சேர்க்கப்படாததே வெற்றி நழுவிப் போக காரணம் என்றும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு எப்படி இந்தியா செல்லும் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்தநிலையில் தான் சௌரவ் கங்குலியும் பிளேயிங் 11-ல் மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, “இந்தத் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. வெள்ளைப்பந்து மற்றும் தற்போது சிவப்புப்பந்து என அனைத்திலும் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஆனால், வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற, நேரம் செல்லச் செல்ல தட்டையாக மாறும் ஆடுகளங்களில் ஒரு உண்மையான சுழற்பந்து வீச்சாளர் அவசியம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அப்படி ஒருவர் இருந்தே ஆக வேண்டும். வாஷிங்டனால் ஒரு ஆல்ரவுண்டராக விளையாட முடியும். குல்தீப் அல்லது மானவ் சுதார் எங்கே?” என பிசிசிஐயை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். கங்குலியின் பதிவிற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.