ind vs nz
ind vs nz Twitter
கிரிக்கெட்

INDvsNZ : 2019 போன்றே போட்டியை மழை பாதிக்குமா? ரிசர்வ் டே உண்டா? Washout ஆனால் யாருக்கு வெற்றி?

Rishan Vengai

2023 உலகக்கோப்பையின் பரபரப்பான லீக் சுற்று முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. கோப்பையை வெல்வதற்காக 4 அணி வீரர்களும் கடுமையாக தயாராகி வருகின்றனர். முதல் அரையிறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேவும், 2வது அரையிறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயும் நடக்கவுள்ளது.

IND v NZ

இந்நிலையில் இரண்டு முக்கியமான போட்டியிலும் மழைக்குறுக்கிடுமா? அப்படி மழைக்குறுக்கிட்டால் ரிசர்வ் டே வழங்கப்படுமா? ரிசர்வ் டேவிலும் ஆட்டம் தடைப்பட்டு வாஸ்அவுட் (Washout) செய்யப்பட்டால் எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் போன்ற பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

மழையால் ஆட்டம் பாதிக்க வாய்ப்பு உண்டா?

கடந்த 2019 உலகக்கோப்பையின் அரையிறுதிப்போட்டியிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரிசர்வ் டேவான இரண்டாவது நாளுக்கு தள்ளிவைக்கப்பட்டது. ஒரு குறைந்த இலக்குடைய போட்டியில் 240 ரன்களை எட்டமுடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில்தான் தற்போதும் அப்படி எதுவும் நடந்துவிடகூடாது என இந்திய ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

Ind vs Nz

மும்பை வான்கடே மைதானத்தை சுற்றி கடந்த வாரம் மழை பெய்துவந்த நிலையில், தற்போது மழை குறித்த எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் போட்டி நன்றாக நடைபெறுவதற்கான சூழ்நிலை மட்டுமே நிலவி வருகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு டாஸ் போடும் போது வெப்பநிலை சுமார் 36 டிகிரியாக இருக்கும் எனவும், கடந்த போட்டிகளை போலில்லாமல் ஈரப்பதமும் சுமார் 30 சதவீதம் மட்டுமே இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

வான்கடே மைதானம்

கடந்த சில போட்டிகளில் வான்கடேவில் காணப்பட்ட கடினமான சூழ்நிலையை விட இது மிகவும் சிறப்பாகவே இருக்கும் எனவும் தெரிகிறது. மாலை நேரத்தில் வெப்பநிலை சுமார் 29 டிகிரிக்கு குறையும், ஆனால் ஈரப்பதம் சுமார் 46 சதவீதமாக உயரும் நிலை ஏற்படும். 18 டிகிரி பனி புள்ளியுடன் இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு உண்மையான பனி அச்சுறுத்தல் இல்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஒரு முழுமையான போட்டியை காணவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

ரிசர்வ் டே உண்டா?

2023 உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளான 2 அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என மூன்று போட்டிகளும் ”ரிசர்வ் டே” இருப்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட்டால், ஆட்டம் எந்த இடத்தில் தடைபட்டதொ அதே இடத்திலிருந்து மீண்டும் வியாழக்கிழமை தொடரும்.

ரிசர்வ் டேவிலும் வாஸ் அவுட் ஆனால் என்ன நடக்கும்?

ஒருவேளை போட்டி ரிசர்வ் டேவுக்கு சென்றும் சுத்தமாக விளையாட முடியாமல் போனால், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடத்தில் இருக்கும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டும் நேராக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.