வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா cricinfo
கிரிக்கெட்

’சொந்த மண்ணில் ZERO..’ 0-5, 0-3 என டி20, ODI தொடரை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்! பரிதாப நிலைக்கு காரணம்?

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டையும் இழந்து படுதோல்வியை சந்தித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

Rishan Vengai

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இரண்டிலும் பங்கேற்று விளையாடியது.

முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்ற நிலையில், 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆனது. அதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, 1955-க்கு பிறகு இரண்டாவது மிகக்குறைவான டோட்டலை பதிவுசெய்து படுமோசமான சாதனையை படைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா

1955-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அணி 26 ரன்களுக்கு சுருண்டதே குறைவான டீம் ஸ்கோராக நீடித்துவரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வரிசையில் இரண்டாவது அணியாக சேர்ந்தது.

அதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆலோசனை வழங்க, பிரையன் லாரா, ஷிவ்நரைன் சந்தர்போல் போன்ற வீரர்கள் அடங்கிய குழு ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.

டி20 தொடரிலும் ஒயிட்வாஷ் ஆன WI..

டெஸ்ட் தொடரை 0-3 என இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 0-5 என இழந்துள்ளது. இரண்டு முறை டி20 உலக சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ், சொந்த மண்ணில் மறக்க முடியாத ஒரு தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும் என்ற முயற்சியில் களம்கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது.

ஆனால் 171 ரன்களை 17 ஓவரில் சேஸ் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை 5-0 என கைப்பற்றி சாதனை படைத்தது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா

சொந்த மண்ணில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் இரண்டையும் இழந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத நிலையில், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸ்ஸல் போன்ற வீரர்களின் ஓய்வு அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது.

என்னதான் ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்ததாக இருந்த போதும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பரிதாப நிலையையே காட்டுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்விக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.

1. மோசமான அணி நிர்வாகம்..

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. ஐபிஎல் அணியின் மும்பை அணி கோப்பைகளை குவிக்கவும், சென்னை அணி கோப்பைகளை குவிக்கவும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் காரணமாக இருந்துள்ளார்கள். அதேபோல், ஐபிஎல்லின் பல அணிகளிலும் அதிரடி காட்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உலகம் முழுவதும் நடைபெறும் பல கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று திறமையை நிரூபித்து வருகின்றன. ஆனால், சொந்த அணிக்காக அவர்களால் வெற்றியை குவிக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் நடந்து கொள்ளும் விதமே வீரர்கள் தொடர்ந்து அணிக்காக விளையாட முடியாத சூழலை உருவாக்குவதாக கூறப்படுகிறது. போதிய சம்பளம் இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளி அங்கே சென்று கொண்டிருக்கின்றன.

2. பேட்டிங், பீல்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் வீரர்கள்

சாய் ஹோப், ஹெட்மயர், அல்சாரி ஜோசப் போன்ற ஸ்டார் வீரர்கள் இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு டி20 கிரிக்கெட் போட்டியைக் கூட வெற்றி பெற முடியவில்லை. அதற்கு முக்கிய காரணமாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடர்ந்து சொதப்புவதும் இருக்கிறது. விக்கெட் சரிவு ஏற்பட்டால் மீண்டும் அணியை தூக்கி நிறுத்துவது ஒரு பிரச்னையாக மாறிவிட்டது.

3. மொமண்டமை இழைந்துவிட்டார்கள்

வெற்றி பெறுவதற்கு மன ரீதியாக கள ரீதியாக ஒரு மொமண்டம் தேவைப்படும். அதனை வெஸ்ட் அணி முற்றிலும் இழந்து நிற்கிறது.

மீண்டு வாருங்கள் இண்டீஸ்.. மீண்டும் வாருங்கள்.,...