இறுதி ஆட்டத்தில் 4 சிக்சர்கள்.. சொந்த மண்ணில் ஓய்வு! விடைபெற்றார் 2 முறை உலக சாம்பியன் ரஸ்ஸல்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான ஆண்ட்ரே ரஸ்ஸல், தன்னுடைய அசாத்தியமான உழைப்பால் உலக பவுலர்களையே நடுங்க வைக்கும் அதிரடி வீரராக பேட்டிங்கில் மிளிர்ந்தார்.
இந்திய மண்ணில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் 240 ஸ்டிரைக்ரேட்டில் அசத்திய ஆண்ட்ரே ரஸ்ஸல், சொந்த மண்ணில் இந்திய அணியை தோல்விக்கு அழைத்துசெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.
2012 மற்றும் 2016 என இரண்டு டி20 உலகக்கோப்பை வென்ற சாம்பியன் வீரரான ஆண்ட்ரே ரஸ்ஸல், 86 டி20 போட்டிகளில் விளையாடி 96 சிக்சர்களை விளாசியுள்ளார்.
சொந்த மண்ணில் விடைபெற்றார் ரஸ்ஸல்..
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டெஸ்ட் தொடரை 0-3 என முழுமையாக இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது போட்டியின் 2வது இன்னிங்ஸில் 27 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 20 முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு டி-20 போட்டிகளோடு மேற்கத்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரும் மூத்த வீரருமான ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்த சூழலில் ஆண்ட்ரே ரஸ்ஸலின் சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியோடு ஓய்வு பெற்றார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து போராடியது, அப்போது 7வது வீரராக களமிறங்கி 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என சிதறடித்த ஆண்ட்ரே ரஸ்ஸல் அணியை 172 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.
அதற்குபிறகு விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஜோஸ் இங்கிலீஸின் 78 ரன்கள் ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் டி20 தொடரிலும் 2-0 என ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.
சொந்த மண்ணில் தன்னுடைய கடைசி போட்டியில் விளையாடிய ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னர் இர்னடு அணி வீரர்களும் மரியாதை செலுத்தினர். ஓய்வுக்கு பிறகு பேசிய ஆண்ட்ரே ரஸ்ஸெல், “சபீனா பார்க்கில் உள்ள மக்களுக்கும், வாய்ப்பு அளித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். சொந்த ஊர் மக்களுக்கு முன்னால் விளையாடியதில் மகிழ்ச்சி, முடிவு எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனால் இவ்வளவு போட்டிகளில் விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் அணி முன்னேற வாழ்த்துக்கள். எனக்கு கிடைத்த அனைத்து ஆதரவிற்கும் நன்றி, நான் அதை மிகவும் மதிக்கிறேன்” என்று பேசினார்.