வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த பின்னர், ரொமாரியோ ஷெபர்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் இணைந்து அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து 89 ரன்கள் சேர்த்ததால், வெஸ்ட் இண்டீஸ் 176 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா அணி 177 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது.
2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுப் பிரிவில் விளையாடி வரும் நிலையில், இங்கிலாந்து அணி அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்புக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய அணி எளிதாக அரையிறுதிக்கு செல்லவேண்டுமானால் இன்று நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ்- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவ வேண்டும். அப்படி நடந்தால் இந்திய அணி மீதமிருக்கும் 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே போதும் அரையிறுதிக்கு சென்றுவிடலாம்.
இந்தசூழலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
அகமதாபாத்தில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிரண்டு ஓவரில் 29 ரன்களை குவித்து மிரட்டலாக தொடங்கியது.
ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை மிரட்டியது. தென்னாப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாத வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்தசூழலில் தான் எளிதில் ஆல் அவுட்டாகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போது, 8வது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த ரொமாரியோ ஷெபர்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியை மீட்டு எடுத்துவந்தனர். 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகளை பறக்கவிட்ட ஷெபர்ட் 52 ரன்களும், 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களை விரட்டிய ஜேசன் ஹோல்டர் 49 ரன்களும் அடிக்க 20 ஓவர் முடிவில் 176/8 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
177 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி முதல் 6 ஓவர் முடிவில் விக்கெட் இழக்காமல் 69 ரன்கள் அடித்துள்ளது.