2026 டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 76 ரன்கள் அடித்து 7 சிக்சர்களை பறக்கவிட்டார். இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர்கள் சிறப்பாக விளையாடினாலும், சாம் கரனின் 43 ரன்கள் போதவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் சுவாரசியம் பெற்றுவருகிறது.
அமெரிக்கா, நேபாள், யுஏஇ போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், பெரிய அப்செட்டை இந்த உலகக்கோப்பை காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் மட்டுமில்லாமல் துணை நாடுகள் என அனைத்து அணிகளும் பல சாதனைகளை முறியடித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 7 சிக்சர்களை பறக்கவிட்டு 76 ரன்கள் விளாசினார். ஷிம்ரன் ஹெட்மயர் 2 சிக்சர்களும், ஜேசன் ஹோல்டர் 4 சிக்சர்களும் அடித்து வலுவான டோட்டலை பெற உதவினர்.
197 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணியில் டாப் ஆர்டர்களான பிலிப் சால்ட், பட்லர் மற்றும் பெத்தல் 3 பேரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் 3 பேரும் பெரிய ரன்களை அடிக்காமல் 30, 21, 33 ரன்களுக்கு வெளியேறினர். தொடர்ந்து வந்த பாண்டன் 2 ரன்கள், கேப்டன் ஹாரி ப்ரூக் 17 ரன்கள், வில் ஜாக்ஸ் 2 ரன்கள் என வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
கடைசிவரை இங்கிலாந்திற்காக போராடிய சாம் கரன் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 43 ரன்கள் அடித்தாலும் 19 ஓவர் முடிவில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தோற்றது. 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்த 2 வெற்றிகளுக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.