WC| 2 சூப்பர் ஓவர்கள்.. உயிரை கொடுத்து போராடிய ஆப்கானிஸ்தான்.. தென்னாப்ரிக்கா த்ரில் வெற்றி!
டி20 உலகக்கோப்பையில் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு சூப்பர் ஓவர்களை கடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை த்ரில் வெற்றியுடன் வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் 84 ரன்கள் அடித்து போராடினாலும், தென்னாப்பிரிக்கா வீரர் மஹாராஜ் கடைசி பந்தில் வெற்றியை உறுதிசெய்தார். இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.
டி20 உலகக்கோப்பையில் இதுவரை இப்படியான ஒரு போட்டியை வரலாறு கண்டிருக்கவில்லை, இரண்டு அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் வெற்றிக்காக உயிரை கொடுத்து போராடியதை பார்த்து பல வருடங்கள் கூட ஆகியிருக்கலாம்.. அப்படி வரலாற்றில் எப்போதும் நினைவில் வைக்கக்கூடிய ஒரு தரமான போட்டியை தென்னாப்பிரிக்காவும், ஆப்கானிஸ்தானும் ரசிகர்களுக்கு விருந்தாக படைத்தனர்.
சமன் செய்யப்பட்ட போட்டி..
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவரில் 187 ரன்களை குவித்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய டிகாக் 59 ரன்களும், ரிக்கல்டன் 61 ரன்களும் அடித்து அசத்தினர்.
188 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 42 பந்தில் 84 ரன்கள் அடித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச்சென்றார். ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய குல்பதீன் நைப் மற்றும் செடிகுல்லா அடல் இருவரும் 0 ரன்னில் வெளியேறி ஏமாற்றினார்.
ஆனால் கடைசியாக வந்த ஓமர்சாய் 22 ரன்களும், கேப்டன் ரசீத் கான் 20 ரன்களும் அடிக்க கடைசி 6 பந்துக்கு 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஆப்கானிஸ்தானுக்கு உருவானது. கடைசி ஓவரை வீசிய ரபாடா இரண்டு நோ பால்களை வீச, நூர் அகமது அபாரமான சிக்சர் ஒன்றை அடிக்க 5 பந்தில் 12 ரன்களை விளாசியது ஆப்கானிஸ்தான். கடைசி பந்தில் 1 ரன் அடித்தால் வெற்றி நிலை இருந்தபோது, ஒரு ரன் எடுக்க ஓடியபோது நான் ஸ்ட்ரைக்கில் இருந்த ஃபசல்ஹாக் ஃபரூக்கி ரன் அவுட்டாகி சொதப்பினார். இதனால் இரண்டு அணிகளும் 187 ரன்களை அடிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
முதல் சூப்பர் ஓவர்..
பரபரப்பாக தொடங்கிய முதல் சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி இங்கி பந்துவீச, ஆப்கானிஸ்தானில் களமிறங்கிய அஸ்மத் மற்றும் குர்பாஸ் இருவரும் சேர்ந்து 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 17 ரன்களை விளாசினர்.
18 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியில் மில்லர் மற்றும் பிரேவிஸ் களமிறங்கினர். பிரேவிஸ் ஒரு சிக்சர் அடித்து அவுட்டாக 3 பந்தில் 7 ரன்களை மட்டுமே அடித்திருந்தது தென்னாப்பிரிக்கா. களத்திற்கு வந்த ஸ்டப்ஸ் ஃபரூக்கி வீசிய 4வது பந்தில் பவுண்டரிக்கு விரட்ட, 5வது பந்தை டாட் பந்தாக வீசி அசத்தினார் ஃபருக்கி. 1 பந்துக்கு 7 ரன்கள் தேவையாக இருக்க எப்படியும் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுவிடும் என நினைத்தபோது, கடைசி பந்தை யார்க்கராக வீசிய முயன்ற பவுலர் ஃபுல்டாசாக வீச அதை சரியாக ஹிட் செய்த ஸ்டப்ஸ் சிக்சருக்கு பறக்கவிட்டார்.
இதன்மூலம் மீண்டும் ஆட்டம் சமனாகி அடுத்த சூப்பர் ஓவருக்கு சென்றது.
2வது சூப்பர் ஓவர்..
இரண்டு அணி வீரர்களும் உயிரை கொடுத்து போராட யாருக்கு வெற்றி சேரும் என்ற கேள்விக்கு பதிலாக 2வது சூப்பர் ஓவர் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் ஸ்டப்ஸ் மற்று மில்லர் களமிறங்கினர். அஸ்மதுல்லா ஓமர்சாய் பந்துவீச ஸ்டப்ஸ் ஒரு சிக்சர், மில்லர் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 23 ரன்களை சேர்த்தது தென்னாப்பிரிக்கா.
24 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் முகமது நபியும், அஸ்மத்தும் களமிறங்கினர். தென்னாப்பிரிக்கா அணி ரிஸ்க் எடுத்து ஸ்பின்னர் மஹாராஜ் கையில் பந்தை கொடுத்தது. முதல் பந்தை எதிர்கொண்ட நபி அதை அடிக்க மிஸ் செய்து டாட் பாலாக மாற்றினார். அடுத்த பந்தில் நபியை அவுட்டாக்கிய மஹாராஜ் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிசெய்தார்.
கடைசி 4 பந்துக்கு 24 ரன்கள் தேவை என்ற நிலையில், களமிறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்ட ஆட்டம் அனல்பறந்தது. கடைசி 1 பந்துக்கு 6 ரன்கள் என்ற நிலை இருக்க, அழுத்தத்தில் கடைசி பந்தை ஒயிடாக வீசினார் மஹாராஜ். சிக்சர் அடித்தால் வெற்றி, பவுண்டரி அடித்தால் அடுத்த சூப்பர் ஓவர் என மீண்டும் ஆட்டம் அனல்பறக்க, கடைசி பந்தை ஒயிட் யார்க்கர் லெந்தில் வீசிய மஹாராஜ் தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றியை உறுதிசெய்தார். தோல்விக்கு பின் 84 ரன்கள், சூப்பர் ஓவரில் 3 சிக்சர்கள் அடித்து போராடிய குர்பாஸ் கண்ணீர்விட்டு அழுதார். அவரை தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் ஆறுதல் படுத்தினார்.
இதுவரை நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அடுத்தடுத்து 2 சூப்பர் ஓவர்களை கடந்த ஒரே போட்டி இதுவாக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டது.

