Virat Kohli
Virat Kohli Twitter
கிரிக்கெட்

குடும்பத்திடம் இருந்து வந்த அவசர அழைப்பு: தென்னாப்ரிக்காவிலிருந்து திடீரென மும்பை திரும்பிய கோலி!

Prakash J

உலகக்கோப்பை தோல்விக்குப் பின் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய இளம்படை, ஆஸ்திரேலியாவை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது. அதன்பிறகு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் (1 போட்டி மழையால் கைவிடப்பட்டது) சமன் செய்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரையும் கே.எல்.ராகுல் தலைமையிலான புதிய அணி 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, பும்ரா ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பொன்முடி வழக்கு தீர்ப்பு: இதுவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?-முழு விபரம்

இந்த நிலையில் இந்திய அணியின் ரன் மிஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, திடீரென தனிப்பட்ட குடும்ப விவகாரங்களுக்காக தென்னப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ’டெஸ்ட் தொடருக்காக சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்றிருந்த கோலி, குடும்ப அவசர சூழ்நிலை காரணமாக இந்தியா திரும்பியுள்ளார். அவசரநிலை குறித்த சரியான விவரங்கள் தெளிவாக தெரியவில்லை. ஆனால் டிசம்பர் 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் கலந்துகொள்வார்’ என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், பிரிட்டோரியாவில் பங்கேற்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில், விராட் கோலி கலந்து கொள்ளவில்லை. முன்னதாக, இதுகுறித்து அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

விராட் கோலி

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி நிர்வாகம் அவரை விடுவித்துள்ளது. கடந்த டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது காயமடைந்தார். அந்த காயம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பெங்களூரு: இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம்... சுவாரஸ்யமான பின்னணி!