பொன்முடி வழக்கு தீர்ப்பு: இதுவரை ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்தவர்கள் யார் யார்?-முழு விபரம்

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தண்டனை விவரங்களை நாளை (டிச.21) அறிவிக்க இருக்கிறது.
அரசியல் தலைவர்கள்
அரசியல் தலைவர்கள்ட்விட்டர்

அமைச்சர்  பொன்முடி மீது ஊழல் வழக்கு

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கப்பட்டதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், தண்டனை விவரங்களை நாளை (டிச.21) அறிவிக்க இருக்கிறது.

தமிழகத்தின் தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த 2006-11 திமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, கனிமவளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2011ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேல்முறையீடு செய்தனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு விசாரணை, இறுதியாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்று வந்தது.

நாளை வெளியாக உள்ள தீர்ப்பின் விவரம்:

இறுதியாக, கடந்த நவம்பர் 27ஆம் தேதி, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தார். இந்நிலையில், அவர் நேற்று பிறப்பித்துள்ள விரிவான தீர்ப்பில், ‘விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்தவழக்கை மேலோட்டமாக விசாரித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72கோடி அளவுக்கு, அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் சொத்து குவித்துள்ளதாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சரிவர நிரூபணமாகியுள்ளன.

ஆனால், அவர்களது வருமானத்தை தனித்தனியாக பிரித்துப் பார்த்து, வருமானவரி கணக்கு அடிப்படையில் இருவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது அடிப்படையிலேயே தவறு. அந்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். எனவே, இந்த வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என்பதால் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக பொன்முடியும், அவரது மனைவியும் டிசம்பர் 21ம் தேதி (நாளை) காலை 10.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் நேரடியாகவோ, காணொலி வாயிலாகவே ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பால் பொன்முடி பதவி பறிக்கப்படுமா? சட்டம் சொல்வது என்ன?

இதையடுத்து, அமைச்சர் பொன்முடியின் பதவி பறிக்கப்படும் எனத் தெரிகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அதுபோல, இந்த வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் பொன்முடி குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தனது எம்எல்ஏ, அமைச்சர் பதவியை அவர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி pt web

திமுகவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை இழக்கப்போவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் செல்வகணபதி அதிமுகவில் இருந்த காலத்தில் செய்த ஊழல் வழக்கால் தண்டனை பெற்றிருந்தார். அதேநேரம் அமைச்சர் பதவியில் இருக்கும்போதே தகுதியிழப்பை சந்திக்கும் 3வது எம்.எல்.ஏவாக பொன்முடி இருப்பார் என்கிறார்கள். இதற்கு முன்னதாக ஜெயலலிதாவும், அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் பதவியை இழந்தனர். தற்போதைய நிலையில் பொன்முடிக்கு உள்ள வாய்ப்பு, தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்விலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்படி மேல்முறையீடு செய்த வழக்கில் நீதிமன்றம், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பதவி தப்பும். இல்லாவிட்டால் எம்எல்ஏ பதவியும், அமைச்சர் பதவியும் பொன்முடிக்கு பறிபோகும் நிலை உள்ளது.

ஊழல் வழக்கில் முதன்முதலில் முதல்வர் பதவியை இழந்தவர் ஜெயலலிதா

1991-1996 அதிமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகால தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததுடன், முதல்வர் பதவியையும் இழக்க நேரிட்டது.

இதன்மூலம், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற முதல் முதல்வர் எனப் பெயரெடுத்தார். அடுத்து, ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, பதவியை இழந்த இரண்டாவது நபரும் இவரே. ஜெயலலிதா மரணம் அடைந்ததால், இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தனர். இவருக்கு முன்பு, இவருடைய ஆட்சியில் இடம்பெற்றிருந்த செல்வகணபதி பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் வழக்கில் முதன்முதலில் அமைச்சர் பதவியை இழந்தவர் செல்வகணபதி

1991-1996 அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்தான் டி.எம்.செல்வகணபதி. இவர் மீது, சுடுகாட்டு தகன மேடைகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியில் ஊழல் நடைபெற்றதாக புகாரளிக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து, விசாரணையைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனால், தனது எம்.பி பதவியை இழந்த செல்வகணபதி, தேர்தலில் போட்டியிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இதற்கிடையே, சிறைத் தண்டனையை எதிர்த்து செல்வகணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டில், செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை ரத்துசெய்யப்பட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ நிச்சயம் மேல்முறையீடு செய்தால் செல்வகணபதிக்கு மீண்டும் சிக்கல்தான் என்கிறார்கள்.

தமிழகத்தில் 3வதாக பதவியை இழந்த அமைச்சர்

ஜெயலலிதா, செல்வகணபதிக்கு அடுத்து பதவியை இழந்தவர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி. கடந்த அதிமுக ஆட்சியில் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. கடந்த 1998ஆம் ஆண்டு தமிழக - கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் செய்யப்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலகிருஷ்ணா ரெட்டி
பாலகிருஷ்ணா ரெட்டி

இதனால் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி இழந்தார். அதேநேரத்தில், சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

2013ஆம் ஆண்டுக்கு முன்புவரை, மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றவர்கள், ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை பெற்றால், அவர்கள் 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்துவிட்டால், பதவி இழக்க மாட்டார்கள் என்று ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 8இன் உள்பிரிவு 4 கூறுகிறது. இந்த உள்பிரிவைப் பயன்படுத்தி, இந்தியா முழுவதும் ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற, ஊழல் மற்றும் சட்டவிதிகளுக்கு மாறாக கூடுதல் சொத்து சேர்த்தல், லஞ்சப் புகார் போன்ற குற்ற வழக்குகளின் தண்டனைகளில் இருந்து தப்பினர்.

judgement
judgementpt web

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு: அவசர சட்டம் கொண்டுவந்த மத்திய அரசு!

இதைத் தடுக்கும் வகையிலும், ’குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், குற்றவாளிகள் என்பது உறுதியானால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் வகையிலும், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என 2005ஆம் ஆண்டு லில்லி தாமஸ் மற்றும் லோக் பிரஹாரி நிறுவனம் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதன்மீது 2013ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பில், ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 8இன் உள்பிரிவு 4ஐ நீக்கி உத்தரவிட்டனர். இந்த உத்­த­ரவை முடக்கும்வகையில், தண்­டனைபெற்ற, மக்கள் பிர­திநி­தி­களின் பத­வி­களைப் பாது­காக்கும் வகையில், அவ­சர சட்டத்தை, மத்­திய அரசு பிறப்­பித்­து, பின் வாபஸ் பெற்றது என்பது நினைவுகூரத்தக்கது.

இந்தியாவில் பதவியை இழந்த அரசியல்வாதிகள் யார்?

இதனால் தற்போது, ஊழல் குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனடியாக பதவி இழக்கும் நிலை உருவாகிவிட்டது. மேலும் அவர்கள் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் தேர்தலிலும் போட்டியிட முடியாது.

தமிழகத்தில் ஜெயலலிதா, செல்வகணபதி, பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் ஊழல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனையும் பெற்றதுடன், தங்களது பதவியையும் இழந்தனர். அந்த வகையில் இந்தியாவில் பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றதுடன் தனது பதவியை இழந்தார். 1990இல் பீகார் முதல்வராக இருந்த அவர்மீது, மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதன் தீர்ப்பில், 2013ஆம் ஆண்டு அவருக்கு 5 சிறை மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவரது எம்.பி. பதவி பறிபோனது. சிறைக்கும் சென்றார். இதே ஊழல் வழக்கில், 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட பீகார் மாநிலம் ஜகன்னாபாத் தொகுதி எம்பியான ஜெகதீஷ் சர்மாவுக்கும் பதவி பறிக்கப்பட்டது.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

1990-91 காலகட்டத்தில் வி.பி.சிங் பிர­த­ம­ராக இருந்­த­போது, சுகா­தார இணை அமைச்­ச­ராக பதவி வகித்தவர், ரஷீத் மசூத். இவர்மீது எம்பிபிஎஸ் இடஒதுக்கீட்டில், முறைகேடாக பணம் பெற்று ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் தனது எம்பி பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்­மூலம், குற்ற வழக்கில், தண்­டனை பெற்று, பதவி பறி­போன முதல் எம்பி ரஷீத் மசூத் ஆவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com