Rohit - Virat Kohli
Rohit - Virat Kohli Twitter
கிரிக்கெட்

“பாஸ்போர்ட்டை மறந்து வைத்துவிட்டு வந்த ரோகித்”-ஹிட்மேன் மறதி குறித்து கோலி பேசிய பழைய வீடியோ வைரல்!

Rishan Vengai

2023 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ரோகித் சர்மா தலைமையில் 2வது முறையாக ஆசியக்கோப்பையை வென்றிருக்கும் இந்தியா, தங்கள் எண்ணிக்கையில் 8-வது ஆசியக்கோப்பையை சேர்த்துள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவிற்கு தொடர் நாயகன் விருதும், இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜிற்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

பாஸ்போர்ட்டை மறந்து வைத்துவிட்டு வந்த ரோகித் சர்மா!

கோப்பையை வென்றதற்கு பிறகு இந்தியவீரர்கள் நாடு திரும்ப கிளம்பிய போது கேப்டன் ரோகித் சர்மா அவருடைய பாஸ்போர்ட்டை ஹோட்டல் அறையிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மீதமுள்ள வீரர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு செல்வதற்காக பேருந்தில் காத்திருந்துள்ளனர். பின்னர் இந்திய அணியின் சப்போர்ட்டிங் ஸ்டாஃப் ஒருவர் ரோகித்தின் பாஸ்போர்ட்டை எடுத்துவந்துள்ளார். ரோகித்தின் பாஸ்போர்ட் கிடைத்ததை அடுத்து பேருந்தில் இருந்த சக வீரர்கள் அதை கத்தி கொண்டாடியது தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்னதாக ரோகித் சர்மாவின் மறதி குறித்து விராட் கோலி பேசிய வீடியோவும் தற்போது ரீஷேர் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டாஸ் போடும் போது பேட்டிங்கா? பவுலிங்கா? என கூறுவதை கூட ரோகித் சர்மா மறந்தார். அப்போதும் ரோகித் சர்மாவின் மறதி குறித்து கோலி பேசிய வீடியோ டிரெண்ட் ஆனது. இந்நிலையில் தற்போதும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

விராட் கோலி பேசியிருக்கும் அந்த வீடியோவில், “ரோகித் சர்மாவை போல் ஒரு மறதியான நபரை பார்க்க முடியாது. சிறிய விசயங்களை மட்டுமல்ல அன்றாட உபயோகத்திற்கு தேவையான ஐபேட், வாலட், போன் முதலிய பொருட்களை கூட மறந்துவிடுவார். அவர் மறந்துவிட்டு வந்ததே அவருக்கு தெரியாது. பேருந்தில் பாதி நேர பயணத்திற்கு மேல் “ஓ, நான் எனது ஐபேடை விமானத்திலேயே விட்டுவிட்டேன்” என்று சொல்லுவார். அதுபோலான பல நிகழ்வுகளுக்கு பிறகு நாங்கள் எப்போது கிளம்பினாலும் ரோகித்திடம் எல்லாம் எடுத்துக்கொண்டீர்களா என கேட்டுவிட்டு தான் கிளம்புவோம்” என கூறியுள்ளார்.