”இப்படியொரு ஆள நான் பாத்ததே இல்ல” - ரோகித்தின் மறதியும்.. விராட்டின் நினைவலைகளும்!

”இப்படியொரு ஆள நான் பாத்ததே இல்ல” - ரோகித்தின் மறதியும்.. விராட்டின் நினைவலைகளும்!
”இப்படியொரு ஆள நான் பாத்ததே இல்ல” - ரோகித்தின் மறதியும்.. விராட்டின் நினைவலைகளும்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் டாஸ் வென்ற பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் ரோகித் சரமா மறந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் ரோகித் சர்மா குறித்து கோலி பேசிய வீடியோ மீண்டும் ரீ-ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சிறிது நேரம் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார். அதாவது பேட்டிங்கை தேர்ந்தெடுப்பதா, இல்லை பவுலிங்கை தேர்ந்தெடுப்பதா என்பது தெரியாமல் ஒரு 15 நொடிகள் பதில் சொல்லாமலேயே நின்றிருந்தார்.

ரோகித் சர்மா சொல்லாமல் நின்று கொண்டிருந்த வீடியோவும், ரோகித் மறந்ததை பின்னாலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சாஹல் மற்றும் சிராஜ் இருவரின் ரியாக்ஷன்களும் சேர்ந்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன.

டாஸ் போடும் போது நிகழ்ந்த சம்பவம் குறித்து பேசிய ரோகித் சர்மா, “நாங்கள் என்ன தேர்ந்தெடுக்க விரும்பினோம் என்பதையே நான் மறந்துவிட்டேன், டாஸ் முடிவை பற்றி நாங்கள் அணியாக நிறைய விவாதித்தோம், கடினமான சூழ்நிலையில் நாங்கள் சவாலை எதிர்நோக்க விரும்பினோம்” என்று தெரிவித்தார்.

பின்னர் டாஸ் வென்ற ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்ய, நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் ரோகித் சர்மாவின் மறதி குறித்து 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்காக விராட் கோலி பேசிய வீடியோ தற்போது ரீ-ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. ரோகித் குறித்து பேசியிருக்கும் விராட் கோலி, “ ரோகித் ஷர்மா உண்மையில் நீங்கள் சந்திக்கும் வேடிக்கையான மனிதர்களில் ஒருவர். அவர் மறந்த பொருட்களின் எண்ணிக்கையை சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி ஒரு மறதியான நபரை நான் பார்த்ததே இல்லை. சிறிய விசயங்களை மட்டுமல்ல அன்றாட உபயோகத்திற்கு தேவையான ஐபேட், வாலட், போன் முதலிய பொருட்களை கூட மறந்துவிடுவார். அவர் மறந்துவிட்டு வந்ததே அவருக்கு தெரியாது. பேருந்தில் பாதி நேர பயணத்திற்கு மேல் “ஓ, நான் எனது ஐபேடை விமானத்திலேயே விட்டுவிட்டேன்” என்று சொல்லுவார். அதை மீண்டும் பெறுவது கடினமானதாக இருக்கும்” என்று விராட் கோலி கூறினார்.

மேலும், “ இப்படி பல சந்தர்ப்பங்களுக்கு பிறகு எப்போது நாங்கள் விமானத்திலிருந்து வந்தாலும், ரோகித் எல்லா பொருட்களும் இருக்கிறதா பாருங்கள்? என கேட்டுவிட்டு, அதற்கு அவர் இருக்கிறது என்று சொன்னப்பின் தான் பேருந்திற்கே செல்வோம்” என்று கூறினார்.

தொடர்ந்து, “ அவரிடம் உள்ள வேடிக்கையான விசயம் என்னவென்றால், நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒன்றை சொல்லிக்கொண்டிருப்பார், அதற்கு அடுத்து பேசுவார் என 5..10..15.. நொடிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாம் காத்திருக்கும்போது, மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பார். அடிப்படையில் அவரை புரிந்து கொள்வது என்பது உங்களுடைய பொறுப்பு. நான் கூற வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இப்போது அது உங்களுடையது. உங்கள் மூளை எவ்வளவு கூர்மையானது என்று பார்க்கிறேன் என்பது போல் உங்களிடமே விட்டுவிடுவார்.” என்று கூறியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் சர்மாவின் மெமரி குறித்து பேசிய விராட் கோலியின் வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com