ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி பார்டர் - காவஸ்கர் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்று சமனில் உள்ளன. மூன்றாவது போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி, இன்று மெல்போர்னில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர்.
இதில் அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சிதறடித்து, சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். தனது அறிமுகப் போட்டி என்றும், உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் பும்ரா என்பதையும் யோசிக்காமல் ஸ்கூப் ஷாட்களால் இந்திய அணியை திணற வைத்தார். அப்போது கான்ஸ்டாஸுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மைதானத்தில், கான்ஸ்டாஸ் நடந்து சென்றபோது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கவாஜா அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது. கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை கண்டிக்கும் வகையில் டிமெரிட் புள்ளி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
24 மாத காலத்தில் ஒரு வீரர் நான்கு டீமெரிட் புள்ளிகள் பெற்றால் அவருக்கு ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு குறைந்த ஓவர் போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தன் குடும்பத்தினருடன் மெல்போர்னுக்குப் புறப்பட்டு வந்தார். அப்போது விராட் கோலி விமான நிலையத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் பத்திரிகையாளர்கள் இணைந்து சமரசத்தில் ஈடுபட்ட பிறகு, அந்த பிரச்னை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.