விராட் கோலி ட்விட்டர்
கிரிக்கெட்

IND Vs SA | விற்பனையில் மந்தம்.. விராட் கோலியின் தொடர் சதங்களால் விற்றுப் போன டிக்கெட்கள்!

விராட் கோலி தொடர்ச்சியாக சதம் அடித்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளன.

Prakash J

விராட் கோலி தொடர்ச்சியாக சதம் அடித்ததால், விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றிய நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலை வகிக்கின்றன. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, நாளை (டிச.6) விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி, தொடரைக் கைப்பற்றும். இந்த நிலையில், இம்மைதானத்தில் மந்தமாக இருந்த டிக்கெட் விற்பனை, தற்போது விராட் கோலியின் அடுத்தடுத்த சதங்களால் அனைத்தும் மின்னல் வேகத்தில் விற்று முடிந்துள்ளது. 3வது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை கடந்த நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கியது.

virat kohli

ஆனால், அப்போது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆன்லைன் விற்பனை மந்தமாக இருந்ததால், கவுண்டர் விற்பனையைத் தொடங்கலாமா என்று ஆந்திர கிரிக்கெட் சங்கம் (ACA) யோசித்தது. ஆனால், ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் போட்டிகளில் விராட் கோலி அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசியதும் நிலைமை தலைகீழாக மாறியது. இதுகுறித்து ACAஇன் மீடியா அண்ட் ஆபரேஷன்ஸ் குழுவைச் சேர்ந்த ஒய்.வெங்கடேஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஆரம்பத்தில் வரவேற்பு இல்லை. ஆனால் கோலி சதம் அடித்த பிறகு, 2-ஆம் கட்ட மற்றும் 3-ஆம் கட்ட டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ.1,200 முதல் ரூ.18,000 வரையிலான டிக்கெட்டுகள் என எதுவும் மிச்சமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறம், விசாகப்பட்டினம் மைதானம் விராட் கோலிக்கு ராசியான மைதானமாகப் பார்க்கப்படுகிறது. அங்கு அவர், இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 3 சதங்களுடன் 97.83 என்ற சராசரியில் ரன் குவித்துள்ளார். விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி இருப்பதால், அவரது ஆட்டத்தைக் காண ரசிகர்கள் படையெடுத்துள்ளனர். இதன் காரணமாகவே டிக்கெட் விற்பனை விரைவாகவே முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, விமான ஊழியர்களின் பற்றாக்குறையால் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் தடைப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ராய்ப்பூரில் இருந்து விசாகப்பட்டினம் செல்ல இந்திய அணி விமான நிலையம் வந்தனர். அங்கு விமானம் தாமதமானதால் பொதுப்பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில், திடீரென விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் அங்கு வந்தனர். அவர்களைப் பார்த்த அடுத்த நொடியே, பயணிகள் தங்கள் கோபத்தை மறந்துவிட்டனர். விமானம் தாமதமானதைப் பற்றிக் கவலைப்படாமல், அனைவரும் தங்கள் செல்போன்களை எடுத்துக்கொண்டு கோலியை வீடியோ எடுக்கவும், கையசைக்கவும் தொடங்கினர்.