விஜய் சங்கர் web
கிரிக்கெட்

”தமிழ்நாடு அணிக்காக தண்ணீர்-கேன் தூக்கமுடியாது..” - விரக்தியில் பேசிய விஜய் சங்கர்

தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் விஜய் சங்கர், தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்திலிருந்து விலகினார். அணியில் இருக்கும் தெளிவின்மை மற்றும் அணியின் ஒரு பகுதியாக இல்லாதது குறித்த விரக்தியே அவரது இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் கூறினார்.

Rishan Vengai

விஜய் சங்கர், தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேறி, திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். அணியில் வாய்ப்புகள் இல்லாததால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அவருக்கு என்.ஓ.சி வழங்கியுள்ளது. 13 ஆண்டுகால பயணத்தை முடித்து, அவர் திரிபுரா அணியுடன் விரைவில் இணையவுள்ளார்.

தமிழ்நாடு அணியில் விளையாடி வந்த சீனியர் வீரரான விஜய சங்கர், அவ்வணிக்காக பல வெற்றிகளையும் தேடித் தந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் விஜய் சங்கர் தமிழ்நாடு அணியின் தொடக்க பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. தவிர, தற்போது நடைபெறும் புச்சிபாபு தொடரிலும் அவர் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து, அவர் தமிழ்நாடு அணியில் இருந்து வெளியேறி, திரிபுரா அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.

விஜய் சங்கர்

அவருடைய விருப்பத்திற்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் ஆட்சேபனையின்மை (என்.ஓ.சி) சான்றிதழ் அளித்துள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் திரிபுரா அணியுடன் இணையவுள்ளார்.

தமிழ்நாடு அணி தேர்வாளர்களிடமிருந்து தனக்கு பாதுகாப்பான உணர்வு கிடைக்காததே, தான் அணி மாற காரணம் என விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் அவருடைய தமிழ்நாடு உடனான 13 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. அவர் தமிழ்நாடு அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

வெளியேறியதற்கான காரணத்தை பகிர்ந்த விஜய் சங்கர்..

தமிழ்நாடு அணியிலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து பேசியிருக்கும் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் விரக்தியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து பேசிய அவர், “உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்காதபோது, நீங்கள் முன்னேறி வாய்ப்புகளைத் தேட வேண்டும். நான் நன்றாக விளையாடி வருகிறேன் என்று நினைக்கிறேன். முக்கியமாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன், அவ்வளவுதான். அப்படியிருக்கும்போது நான் வெளியே அமர்ந்துகொண்டு தண்ணீர் கேன் தூக்க முடியாது. பல வருடங்களாக விளையாடிய பிறகு இது மிகவும் கடினமாக உள்ளது.

vijay shankar

கடந்தாண்டு ரஞ்சிக்கோப்பையில் சில போட்டிகளில் நீக்கப்பட்டேன், பின்னர் கஷ்டப்பட்டு போராடி சையத் முஷ்டாக் அலி டிராபியில் மீண்டும் பங்கேற்றேன், ஆனால் அப்போதும் கடைசி இரண்டு ஆட்டங்களில் நான் நீக்கப்பட்டேன். அதன் பிறகு, அது மிகவும் கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில் உங்களுக்கு கொஞ்சம் தெளிவு தேவை. எனக்கு அந்த தெளிவு பயிற்சியாளர்களிடமிருந்து கிடைக்கவில்லை” என்று விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார்.