கடந்த அக்டோபர் 10-ம் தேதி தொடங்கிய 2024-2025 ரஞ்சிக்கோப்பை தொடரானது முடிவை எட்டியுள்ளது. விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இரண்டு முறை ரஞ்சிக்கோப்பை வென்ற விதர்பா அணியானது, கடந்த முறை இறுதிப்போட்டிவரை முன்னேறி மும்பை அணியிடம் தோற்று ரன்னராக முடித்தது.
அதேபோல 1951-க்கு பின் 74 வருடங்களுக்கு பிறகு ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற கேரளா அணி, தங்களுடைய முதல் ரஞ்சிக்கோப்பை வெற்றிக்காக களம்கண்டது.
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற விதர்பா அணி ரஞ்சிக்கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கிய இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி, டேனிஷ் மாலேவாரின் 153 ரன்கள் மற்றும் கருண் நாயரின் 86 ரன்கள் உதவியால் 379 ரன்களை குவித்தது.
விதர்பாவை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய கேரளா அணி 324/ 6 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் சிறப்பாக விளையாடியது. கேரளா கேப்டன் சச்சின் பேபி 98 ரன்களில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி நிலைத்து நின்று விளையாடினார்.
ஆனால் அதுவரை சிக்சரே அடிக்காமல் 235 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகளுடன் விளையாடிய சச்சின் பேபி, பொறுப்பற்ற முறையில் சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் வெளியேறியதை தொடர்ந்து அடுத்த 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த கேரளா அணி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் வாய்ப்பை தவறவிட்டு 342 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
ரஞ்சிக்கோப்பை நாக்அவுட் விதிகளின் படி 5 நாட்கள் கொண்ட போட்டி சமனில் முடிந்தால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டும்.
கேரளா 37 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய விதர்பா அணி கருண் நாயரின் 135 ரன்கள் சதத்தால் 400 ரன்களுக்கு மேல் லீடிங் எடுத்தது. இந்த சூழலில் ஆட்டம் சமனில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் விதர்பா அணி ரஞ்சிக்கோப்பை சாம்பியனாக மாறி சாதனை படைத்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் 3வது முறையாக கோப்பை வென்று மகுடம் சூடியுள்ளது விதர்பா அணி. கருண் நாயர் தொடர்ந்து சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்திவரும் நிலையில், சீக்கிரம் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுங்கப்பா என்ற குரலை ரசிகர்கள் உயர்த்தியுள்ளனர்.