vaibhav suryavanshi x page
கிரிக்கெட்

’சீக்கிரம் இந்திய அணியில் எடுங்க பா..’ 61 பந்தில் 108* ரன்கள்.. புதிய வரலாறு படைத்த சூர்யவன்ஷி!

14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி தொடர்ந்து தன்னுடைய அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்..

Rishan Vengai

சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி 61 பந்தில் 108 ரன்கள் குவித்து பிஹார் அணியை முன்னேற்றினார். 7 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அவர், தொடர்ந்து அவருடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்..

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு சண்டையிட்டு விலைக்கு வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.. யார் இந்த பையன்? எதுக்கு இவனுக்கு இத்தனை கோடி? என எல்லோருக்கும் ஆச்சரியம் தொற்றிக்கொள்ள, ஐபிஎல்லில் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு ‘யார்ரா இந்த பையன்..?’ என எல்லோரையும் வாயடைக்க வைத்தார் சூர்யவன்ஷி..

தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்தில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷி, குறைந்த வயதில் டி20 சதமடித்த வீரராக வரலாறு படைத்தார்.. அதில் அவர் 11 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார்..

வைபவ் சூர்யவன்ஷி

தொடர்ந்து தன்னுடைய அபாரமான திறமையால் தலைப்புச்செய்திகளில் இருந்துவரும் வைபவ் சூர்யவன்ஷி, அடுத்தடுத்து யு19 டெஸ்ட் போட்டியில் இந்திய வீரராக அதிவேக சதம், ரைசிங் ஸ்டார் ஆசியக்கோப்பையில் 32 பந்தில் சதம் என மிரட்டிவருகிறார்..

இந்தசூழலில் இன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியிலும் 58 பந்தில் சதமடித்து அசத்தியுள்ளார்..

108 ரன்கள் குவித்த சூர்யவன்ஷி..

இன்று பரபரப்பாக நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் சூர்யவன்ஷியின் பிஹார் அணி, மஹாராஷ்டிராவை எதிர்கொண்டு விளையாடியது..

முதலில் பேட்டிங் செய்த பிஹார் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயது வீரரான சூர்யவன்ஷி, 61 பந்தில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்கள் என பறக்கவிட்டு 108 ஆட்டமிழக்காமல் இருந்தார்.. அவருடைய அபாரமான சதத்தின் உதவியால் 20 ஓவரில் 176 ரன்களை மட்டுமே எட்டியது பிஹார் அணி.. அவரை தவிர மற்றவீரர்கள் 70, 80 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடியது பாதகமாக மாறியது..

177 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய மஹாராஷ்டிரா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பிரித்வி ஷா, 30 பந்தில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 66 ரன்கள் அடித்து மிரட்டினார். தொடர்ந்து வந்த வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது மஹாராஷ்டிரா..

தொடர்ந்து தன்னுடைய பேட்டிங் திறமையால் மிளிர்ந்துவரும் சூர்யவன்ஷியை, அவர் பிரைம் ஃபார்மில் இருக்கும்போதே இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும், சீக்கிரம் இந்திய அணிக்குள் கொண்டுவாங்க பா என்ற கோரிக்கையை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்..

புதிய வரலாறு படைத்த சூர்யவன்ஷி..

14 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி சையத் முஷ்டாக் அலி டிராபியில் சதமடித்ததன் மூலம், SMAT தொடரிலும் இளம் வயதில் (14 வருடம் 250 நாட்கள்) சதம் விளாசிய வீரராக வரலாறு படைத்தார்.. ஏற்கனவே அவர் ஐபிஎல்லில் சதமடித்த இளம் வீரர், இந்தியா ஏ அணிக்காக சதமடித்த இளம் வீரர் என்ற வரலாற்று சாதனைகளையும் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..