2026, U19 உலகக் கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி, இளையோர் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, இன்றைய போட்டியில் வங்கதேசமும், இந்தியாவும் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்திருந்த மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்போதுவரை தடைப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தப் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 67 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இதில், 6 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடக்கம். அதேநேரத்தில், இதில் அவர் அரைசதம் அடித்ததன்மூலம் ஒருசில சாதனைகளுக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார்.
15 வயதைக் கடப்பதற்கு முன்னரே உலகக்கோப்பையில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையுடன், இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலியின் சாதனையையும் முறியடித்துள்ளார். யு-19 உலகக்கோப்பை வரலாற்றில் அரைசதம் (50+) அடித்த உலகின் மிக இளம் வயது வீரர் (14 வயது மற்றும் 296 நாட்கள்) என்ற பிரம்மாண்ட சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
அடுத்து, யூத் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்தியர்களின் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். விராட் கோலி யு-19 போட்டிகளில் 28 ஆட்டங்களில் 978 ரன்கள் எடுத்திருந்தார். வைபவ் சூர்யவன்ஷி, தனது 20-வது போட்டியிலேயே 1000 ரன்களைக் கடந்து, தற்போது 1047 ரன்களுடன் கோலியை முந்தியுள்ளார். இதே பட்டியலில் இவருக்கு முன்பாக உள்ள சர்பராஸ் கானை (1080) விஞ்ச வைபவ்க்கு இன்னும் 33 ரன்கள் தேவை. அதையும் இந்தத் தொடரிலேயே முறியடித்து புதிய சாதனை என ரசிகர்கள் நம்புகின்றனர்.
அடுத்து, யூத் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த 3-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் வைபவ் பெற்றுள்ளார். சுப்மன் கில் (13 இன்னிங்ஸ்), உன்முக் சந்த் (17 இன்னிங்ஸ்) ஆகியோருக்கு அடுத்த அவர் 20 இன்னிங்ஸ்களில் அந்த ரன்களை எடுத்துள்ளார். தவிர, யூத் ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய 7-ஆவது இந்திய வீரர் அவர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஏற்கெனவே அமெரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் அவர் களம் கண்டபோது, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய உலகின் மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திருந்தார். யு19 உலகக்கோப்பை போட்டி மட்டுமல்லாது, எல்லாப் போட்டிகளிலும் அவரது மட்டை, சாதனையை நிகழ்த்தியபடி இருக்கிறது.