Vaibhav Sooryavanshi x page
கிரிக்கெட்

ஜிம்பாப்வே தொடரில் சாதித்த வைபவ் சூர்யவன்ஷி.. இனி விளையாடுவது எப்போது?

டி20 தொடரில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் வரிசை கட்டி, திறமையை நிரூபித்து வரும் நிலையில், இனி அவர் எப்போது விளையாடுவார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Prakash J

அயர்லாந்து, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியில் 15 வயதே ஆன, வைபவ் சூர்யவன்ஷியும் இடம்பெற்றிருந்தார். ஆனால், அயர்லாந்து தொடரில் அவர் அறிமுகம் செய்யப்படாதபோதும், இங்கிலாந்து அணியில் களமிறக்கப்பட்டார். ஆனாலும், அந்தத் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனினும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்தார். இந்தத் தொடரில், பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது திறமையை நிரூபித்தார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், 2 போட்டிகளில் அரைசதம் அடித்து, ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றதுடன், தொடரை வெல்லவும் வழிவகுத்தார். இதையடுத்து, இனி அவர் எப்போது விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Vaibhav Sooryavanshi

மேலும், டி20 தொடரில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் வரிசை கட்டி, திறமையை நிரூபித்து வரும் நிலையில், அவரது இடம் உறுதி செய்யப்படுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அடுத்த தொடரிலும் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில், அந்த தொடருக்காக அவர் இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். செப்டம்பர் கடைசி வாரத்தில் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் டி20 கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி விளையாடுகிறது. அதற்கான அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய இரண்டு தொடக்க வீரர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது. ஒருவேளை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்து அசத்தும்பட்சத்தில் இந்தத் தொடரிலும் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. இதையடுத்து, அவரது ஆட்டத்தைப் பார்க்க இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்.