\
Today Zimbabwe vs India T20 First Match Starts vaibhav sooryavanshi Warns
வைபவ் சூர்யவன்ஷிcricinfo

IND Vs ZIM T20 | இதே மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷி செய்த காரியம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, 3 டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது. அதன் முதல் போட்டி இன்று மாலை நடைபெற இருக்கிறது.
Published on

அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கான டி20 தொடரை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா இழந்த நிலையில், அடுத்து ஜிம்பாப்வேவுக்குச் சென்றுள்ளது. அந்த அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதன் முதல் போட்டி, இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரேயில் நடைபெற உள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து, 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, களமிறங்க உள்ளார். மூன்றாவது இடத்தில் இஷான் கிஷான், அடுத்து ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கலாம்.

இவர்களைத் தவிர திலக் வர்மா, ரிங்கு சிங் உள்ளிட்ட வீரர்களும் பேட்டிங்கில் கலக்க உள்ளனர். பவுலிங்கில், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், யாஷ் தாக்கூர் என வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்துவீச்சாளராக ரவி பிஷ்னோயும் உள்ளார். ஆல் ரவுண்டர்களாக ஹர்ஷ் துபே, ஷிவம் துபே, சுயான்ஷ் என மூவரில் இருவர் தேர்வு செய்யப்படலாம். சூழலுக்கு ஏற்ப, மூன்று வீரர்களும் தேர்வு செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

அதேபோல், ஜிம்பாப்வே அணியும் வங்கதேச தொடர்களை வென்ற உற்சாகத்தில் உள்ளது. அவ்வணியின் அனுபவ கேப்டன் சிக்கந்தர் ராசா பலம் சேர்க்கிறார். பென் கர்ரான், பென்னெட், மசகட்சா பேட்டிங்கில் கைகொடுக்க உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் முசரபானி, ரிச்சர்டு நிகரவா என வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால், இருதரப்பிலும் கடும் போட்டியே இருக்குமென்றும் கூறப்படுகிறது. என்றாலும், தொடர் தோல்விக்கு மத்தியில் இந்திய அணி இத்தொடரை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்னொரு புறம், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி இம்மைதானத்தில் 80 பந்தில் 175 ரன் விளாசி, இந்தியா கோப்பை வெல்ல கைகொடுத்தார். தற்போது மீண்டும் இங்கு விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணிக்காக அறிமுகமானதிலிருந்து, தனது மட்டையிலிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸுக்காகக் காத்திருக்கும் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி மீதும் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ கவனம் உள்ளது.

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi pt web

இந்தியா: சூர்யவன்ஷி, அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, ஷிவம் துபே, பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அசோக் ஷர்மா, மயங்க் யாதவ், யாஷ் தாக்குர்

ஜிம்பாப்வே: பிரையன் பென்னட், மருமானி, டியான் மையர்ஸ், சிகந்தர் ராசா (கேப்டன்), ரையான் பர்ல், பிராட் இவான்ஸ், பென் கர்ரன், வெஸ்லி மாதேவிர், மில்டன் ஷூம்பா, பிளஸ்சிங் முஜரபானி, ரிச்சர்ட் நரவா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com