சச்சின், வைபவ் எக்ஸ் தளம்
கிரிக்கெட்

’களத்துலேயே இறங்கல; அதுக்குள்ள..’ சச்சினின் 37 ஆண்டுகால சாதனையை தகர்த்த வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய அணியில் இடம்பிடித்த மிக இளம் வீரர் என்ற அவரது சாதனை கடந்த 37 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது.

Prakash J

கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரராக விளங்குகிறார் சச்சின் டெண்டுல்கர். அந்த வகையில், இன்னும் களத்துக்குள் இறங்காமலேயே அவருடைய சாதனையை முறியடித்துள்ளார் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி.

எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருபது ஓவர் கிரிக்கெட்டில் இந்தியஅணி ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுடனான தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. டி20 உலகக்கோப்பையை வென்று தந்த சூர்யகுமார் யாதவிடம் இருந்து கேப்டன் பதவி, ஸ்ரேயஸ் ஐயர் வசம் சென்றுள்ளது. தவிர, சூர்யகுமார் யாதவுக்கும் இந்த அணியில் இடம்கிடைக்கவில்லை. இன்னொரு புதிய மாற்றமாக, 15 வயது 71 நாட்களேயான வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதன்மூலம், இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இந்திய அணியில் இடம்பெற்ற மிக இளம் வயது வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சச்சின்

கடந்த 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தனது 16-ஆவது வயதில் இந்திய அணியில் அறிமுகமாகி இருந்தார் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணியில் இடம்பிடித்த மிக இளம் வீரர் என்ற அவரது சாதனை கடந்த 37 ஆண்டுகளாக யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. தற்போது, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் 15 வயதே ஆன பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, சச்சினின் சாதனையைத் தகர்த்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 16 போட்டிகளில் 776 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை வென்றார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக வைபவ் சூர்யவன்ஷி ஆட்டத்திறன் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பினர். ஆனால், ஜஸ்பிரித் பும்ரா, பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் காகிசோ ரபாடா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை கொஞ்சமும் பயமின்றி நாலாபுறமும் சிதறடித்தார். ஐபிஎல் தொடரில் அவர் காட்டிய அதிரடியும் சரவெடியுமே அவரை அடுத்தநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அயர்லாந்து தொடருக்கு முன்னதாக வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஏ அணியில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூர்யவன்ஷியின் தேர்வு குறித்து தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர், "அவரது அபார ஆட்டத்திறனை எங்களால் புறக்கணிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய அழுத்தங்கள் நிறைந்த போட்டிகளில் ஒரு 15 வயது சிறுவன் காட்டியுள்ள முதிர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் ஒரு ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர். அவர் மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது" என்றார்.