2011 world cup
2011 world cup pt desk
கிரிக்கெட்

2011 உலகக்கோப்பையை செதுக்கிய நாயகர்கள் யார் யார்? பேசப்படாத ஹீரோக்கள் லிஸ்ட், இதோ...!

Rajakannan K

2011 உலகக்கோப்பை என்றால் இருவர் பெயர் அடிக்கடி பேசப்படும். ஒன்று ஃபைனல் போட்டியில் 91 ரன்கள் விளாசி, கேப்டனாக கோப்பையை வென்றெடுத்த

மகேந்திர சிங் தோனி.

மற்றொன்று சச்சின் டெண்டுல்கர். போட்டி முடிந்ததும், அனைத்து வீரர்களின் வாயில் இருந்தும் உதிர்ந்த ஒரே வார்த்தை,

சச்சின்.

ஆம், இந்திய கிரிக்கெட் அணிக்காக பல சாதனைகளை செய்த, உலக கிரிக்கெட்டின் ஒரு முகமாகவும் இருந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு ஒரு மகுடம் போல் இந்த கோப்பை அமைந்தது. மைதானத்தில் சச்சினை தங்களது தோள்களில் தூக்கி சுமந்தபடி வீரர்கள் மைதானத்தை வலம் வந்ததே அதற்கு சான்று.

2011 உலகக்கோப்பையில் சச்சினை சுமந்து சென்ற வீரர்கள்

ஆனால், 2011 உலகக்கோப்பை தொடரில் நாம் கொண்டாட வேண்டிய வீரர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் யுவராஜ் சிங். பேட்டிங், பவுலிங, பீல்டிங் என அனைத்திலும் ஜொலித்தவர். அடுத்து, அதிக விக்கெட்டுக்களை சாய்த்த ஜாகீர் கான். தொடர் முழுவதும் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை செய்த கவுதம் கம்பீர். அத்துடன் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் பங்களிப்பும் முக்கியமான ஒன்றுதான். இவை அனைத்து குறித்தும் விரிவாக பார்க்கலாம்...

தூணாக நின்று விக்கெட் வீழ்ச்சியை தடுத்த விராட் கோலி!

இறுதிப்போட்டியில், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு. சற்றே கடினமான இலக்குதான். அன்றைக்கு 250 ரன்களுக்கு மேல், அதுவும் இறுதிப் போட்டியில் என்பது, கூடுதலான அழுத்தத்தை கொடுக்கக் கூடிய ரன்கள். அதிரடி மன்னன் சேவாக், ஜாம்பவான் சச்சின் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க, முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே இந்தய வீரர்களுக்கு அதிர்ச்சி கிடைத்தது. மலிங்கா ஓவரில் டக் அவுட் ஆனார் சேவாக். இந்த, அதிர்ச்சி ஓய்வதற்குள் சச்சினும் 18 ரன்னில் மலிங்காவிடமே வீழ்ந்தார். 31 ரன்களில் 2 விக்கெட்களை இழந்து இந்திய தடுமாறியது.

இப்படியான இக்கட்டான சூழலில்தான் கம்பீர் உடன் ஜோடி சேர்ந்தார் விராட் கோலி.

அப்போது அனுபவம் குறைவான இளம் வீரர் கோலி. அனுபவம் வாய்ந்த கவுதம் கம்பீர் உடன் ஜோடி சேர்ந்து தூணாக நின்று விக்கெட் வீழ்ச்சியை தடுத்தார் விராட்.தேவையான நேரத்தில் சில பவுண்டரிகளை விளாசிய விராட், சிங்கிள்களாக அடித்து அணியை 100 ரன்களை கடக்க வைத்தார். 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. இக்கட்டான நேரத்தில் அந்த 35 ரன்கள் மிகவும் முக்கியமான ஒன்று.

India Team

தொடர் நாயகன் யுவராஜ் சிங்!

இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் யுவராஜ் அடித்தது 21 ரன்களாக இருக்கலாம். ஆனால் பந்து வீச்சில் அவரது பங்களிப்பு அளப்பரியது. ஆம், முக்கியமான நேரத்தில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர். 48 ரன்களுடன் களத்தில் வலுவாக இருந்த கேப்டன் சங்ககாராவின் விக்கெட்டை சாய்த்தார். மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படும் தில்ஷான் சமரவீராவை 21 ரன்னில் வெளியேற்றினார்.

ஆனால், அந்த தொடர் முழுவதுமே ஆல் ரவுண்டராக ஜொலித்தார் யுவராஜ். பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி 362 ரன்கள் எடுத்தார். 58, 50*, 51*, 12, 113, 57*, 0, 21* என தொடர்ச்சியாக பார்மில் இருந்து ரன்கள் எடுத்தார். 4 அரைசம் மற்றும் ஒரு சதம் விளாசி இருக்கிறார். 4 முறை நாட் அவுட் ஆகியுள்ளார். பவுலிங்கை பொறுத்தவரை ஒருமுறை 5 விக்கெட் மற்றும் 5 ஆட்டங்களில் தலா 2 விக்கெட் என 15 விக்கெட்டுகளை அள்ளினார். தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

2011 உலக்கோப்பைக்கு முன்பு யுவராஜ் பார்மில் இல்லை. தொடர்ச்சியாக காயங்கள் வேறு. இடையில் ஒருநாள் அணியில் இருந்து டிராப் செய்யப்பட்டதும் நடந்தது. இதெல்லாம் தாண்டி புற்றுநோய் பாதிப்பிலும் அவதிப்பட்டார். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் அன்றைய தினம் ஒரு நாயகனாக ஜொலித்தார் யுவராஜ் சிங்.
zahir khan

விக்கெட் நாயகன் ஜாகீர் கான்!

இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலியால் பட்டை தீட்டப்பட்டவர்தான் ஜாகீர் கான். 2003 உலகக்கோப்பையில் முக்கிய பங்காற்றி 18 விக்கெட்டுகளை சாய்த்து இருப்பார். ஆனால், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியதால் எல்லாம் பேசப்படாமல் போனது.

ஜாகீர் கானின் அனுபவம் 2011 உலக்கோப்பையில் பல வெற்றிகளுக்கு வித்திட்டது. ஆம், 21 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப் பயணத்தில் தனது முத்திரையை பதித்தார் ஜாகீர். அவரது பங்களிப்பு இல்லை என்றால் இந்திய அணிக்கு கோப்பை கனவு நிறைவேறி இருக்காது.

ஜாகீர் கான்

பேட்டிங்கில், சச்சின் 482, கம்பீர் 393, சேவாக் 380, கோலி 282 என பலரும் பங்களிப்பு செலுத்தினர். இறுதிப்போட்டியில் கம்பீரின் 97 ரன்கள் அளப்பரிய பங்களிப்பு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பந்து வீச்சில் ஜாகீர் கானுக்கு அடுத்து யுவராஜ் 15, முனாப் 11 விக்கெட் சாய்த்தனர். பலரது உழைப்பால் 2011-ல் கையில் ஏந்தப்பட்டது உலகக்கோப்பை.

Virat Kohli

அதில் மகுடம் போன்றதுதான் தோனியின் கேப்டன்சி. 28 ஆண்டு கனவை நனவாக்கியவர். கங்குலி உள்ளிட பல கேப்டன்களுக்கு கிடைக்காத வாய்ப்பு கபில் தேவ்-க்கு பிறகு தோனியையே வந்து சேர்ந்தது. கம்பீர் புலம்புவது போல் இல்லாமல், வரலாற்று வெற்றிக்காக பங்களிப்பு செலுத்திய அனைத்து ஹீரோக்களையும் கொண்டாடுவோம்.