u19 india x page
கிரிக்கெட்

U19 WC சூப்பர் சிக்ஸ் | Zimவை வீழ்த்தி இந்தியா முதலிடம்.. பிப்.1 Pakஉடன் மோதல்!

16-ஆவது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.

Prakash J

16-ஆவது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. அடுத்து, இதே பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணியை, இந்திய அணி வரும் 1ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது.

16 அணிகள் பங்கேற்ற 16-ஆவது யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதில் குரூப் 2-இல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கெனவே லீக் சுற்றில் நியூசிலாந்து, வங்காளதேசத்தை வீழ்த்தி இருப்பதால் அந்த வெற்றிக்குரிய புள்ளி சூப்பர் 6 சுற்றில் கணக்கில் கொள்ளப்படும்.

அவற்றுடன் இனி மோத வேண்டியதில்லை. போட்டி விதிப்படி சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி, இன்னொரு பிரிவில் இருந்து வந்த 2-ஆவது மற்றும் 3-ஆவது இடத்தை பிடித்த அணிகளுடன் மட்டுமே மோத வேண்டும். இதன்படி ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது. அதன்படி, ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சூப்பர் 6 சுற்றுப் பிரிவில் நேற்று ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது.

முதலில் பேட் செய்த இந்திய அணியில் இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி 30 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு வந்த விஹான் மல்கோத்ரா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் சதமடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அவர், ஆட்டமிழக்காமல் 107 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். மறுபுறம், அவருக்கு துணை நின்ற அபிக்யான் குண்டு 61 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணியின் ரன்ரேட்டும் உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்தது. பின்னர், கடுமையான இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி, 37.4 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

u19 india - zim

இதையடுத்து, இந்திய அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தவிர, சூப்பர் சிக்ஸ் பிரிவிலும் முதலிடத்தைப் பிடித்தது. இன்னொரு புறம், இதே பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், குரூப் 2 அணிகளில் இருந்து இந்தியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே அரையிறுதிக்கான வாய்ப்புகளில் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பிளாக்பஸ்டர் மோதலில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.