2026 டி20 உலகக்கோப்பையில் யுஏஇ வீரர் முகமது வாசீம், ரோகித் சர்மாவின் சாதனையை நெருங்கி, 190 சிக்சர்களை கடந்து அசத்தினார். யுஏஇ அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றால், ரோகித் சாதனையை முறியடிக்க வாய்ப்பு அதிகம்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் சுவாரசியம் பெற்றுவருகிறது.
அமெரிக்கா, நேபாள், யுஏஇ போன்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுவரும் நிலையில், பெரிய அப்செட்டை இந்த உலகக்கோப்பை காணும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் மட்டுமில்லாமல் துணை நாடுகள் என பல சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்திருக்கும் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் முயற்சியில் நெருக்கமாகி உள்ளார் யுஏஇ வீரர் முகமது வாசீம்.
2026 டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் யுஏஇ அணிகள் விளையாடிவருகின்றன. சென்னையில் நடந்துவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி 20 ஓவரில் 173 ரன்கள் அடித்துள்ளது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய யுஏஇ கேப்டன் முகமது வாசீம் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உட்பட 66 ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்தப்போட்டியில் 3 சிக்சர்களை அடித்த முகமது வாசீம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 190 சிக்சர்களை கடந்து அசத்தினார். முதலிடத்தில் 205 சிக்சர்களுடன் ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் 193 சிக்சர்களுடன் யுஏஇ வீரர் வாசீம் நீடிக்கிறார். அடுத்தடுத்த இடத்தில் சூர்யகுமார் யாதவ், பட்லர் முதலியோர் 173 சிக்சர்களுடன் நீடிக்கின்றனர்.
குரூப் டி-ல் இடம்பெற்றுள்ள யுஏஇ அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றால் ரோகித் சர்மாவின் சாதனையை முகமது வாசீம் முறியடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மேலும் இன்று தங்களுடைய முதல் லீக் போட்டியையே யுஏஇ விளையாடுகிறது.