u19 india team x page
கிரிக்கெட்

U19 Asia Cup | அரையிறுதியில் இலங்கையுடன் இன்று மோதல்.. ஆயுஷ் படை Finalக்குள் நுழையுமா?

யு19 ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

Prakash J

யு19 ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, மலேசியா ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இத்தொடரில் லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. அந்த வகையில் ஏ பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும், பி பிரிவில் வங்கதேசமும் இலங்கையும் தகுதி பெற்றன. இந்த நிலையில், ஏ பிரிவில் முதலிடம் பெற்ற இந்திய அணி, பி பிரிவில் இரண்டாம் இடம்பிடித்த இலங்கை அணியை, இன்று அரையிறுதியில் சந்திக்கிறது. அதேபோல், ஏ பிரிவில் 2வது இடம்பெற்ற பாகிஸ்தான் அணி, பி பிரிவில் முதலிடம் பெற்ற வங்கதேச அணியை மற்றொரு அரையிறுதிப் போட்டியில் சந்திக்கிறது. இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.

அபிக்யான் குண்டு

ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய யு அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸை 234 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்திலும் மலேசியாவை 315 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. மறுபுறம், இலங்கை நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தானை தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளுடன் தொடங்கியது, பின்னர் வங்கதேசத்திடம் தோற்றது. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி, அபக்யான் குண்டு ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக ஒரு சதம், ஒரு அரைசதத்துடன் சூர்யவன்ஷி உள்ளார். அபக்யான் குண்டு கடந்த போட்டியில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார். தவிர கனிஷ்க் சௌஹான், தீபேஷ் தேவேந்திரன் உள்ளிட்டோரும் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். எனினும், நாக் அவுட் போட்டி என்பதால் இரு அணிகளுக்கும் சற்றே சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.