2024 யு19 உலகக்கோப்பை சூப்பர்ஸ்டார் வீரர்கள்
2024 யு19 உலகக்கோப்பை சூப்பர்ஸ்டார் வீரர்கள் ICC
கிரிக்கெட்

"பும்ராவை விட நான் சிறந்தவன்; சொல்லி அடித்த கில்லி" - யு19 WC-ல் பட்டையை கிளப்பிய டாப் 6 வீரர்கள்!

Rishan Vengai

முஷீர் கான் (இந்தியா)

நடப்பு யு19 உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக மட்டுமல்லாமல், பவுலிங்கிலும் பங்களிப்பு கொடுத்து ஒரு ஆல்ரவுண்டர் மெட்டீரியலாக வலம் வருகிறார் முஷீர் கான். இந்த இந்திய ஆல்ரவுண்டர் மும்பை உள்நாட்டு பேட்டிங் சென்சேஷனாக தலைப்பு செய்திகளில் இருந்துவரும் சர்பராஸ் கானின் தம்பி ஆவார். சர்பராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அதேநேரத்தில், யு19 உலகக்கோப்பையை கலக்கிவருகிறார் முஷீர் கான்.

முஷீர் ஐந்து போட்டிகளில் 83.50 சராசரியுடன் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 334 ரன்களை குவித்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 131 ரன்களாகும், அதுமட்டுமல்லாமல் பந்துவீச்சில் 24.25 என்ற சராசரியுடன் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். யு19 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில்ஷிகர் தவான் உடன் இணைந்துள்ள முஷீர், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அதனை சமன் செய்யவோ அல்லது முறியடிக்கவோ வாய்ப்புள்ளது.

குவேனா மபாகா (தென் ஆப்பிரிக்கா)

நடப்பு உலகக்கோப்பையில் சென்சேஷன் பவுலராக வலம்வருகிறார் தென்னாப்பிரிக்காவின் குவேனா மபாகா. யு19 உலகக்கோப்பை தொடங்கப்பட்ட போது பும்ரா குறித்து “பும்ரா நீங்கள் சிறந்த பவுலர் தான், ஆனால் நான் உங்களை விட சிறந்தவன்” என மபாகா கூறிய போது, எல்லோரும் அவரை ஒரு அதிகப் பிரசங்கியாகவும், ட்ரோல் மெட்டிரீயலாகவும் மட்டுமே பார்த்தனர். ஆனால் யு19 உலகக்கோப்பை வரலாற்றில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்துவீச்சாளராக வரலாறு படைத்துள்ளார் குவேனா மபாகா.

Kwena Maphaka

அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் மார்கோ ஜான்சன் உள்ளிட்ட சில சிறந்த வேகப்பந்து வீச்சு திறமைகளை தென்னாப்பிரிக்கா உருவாக்கியுள்ளது. இந்த நட்சத்திர பட்டாளத்துடன் விரைவில் சேரக்கூடிய 17 வயது இளைஞனாக குவேனா மபாகா நிச்சயம் இருக்கிறார். வெறும் 9.55 சராசரியில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் மபாகா, நடப்பு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக இருக்கிறார். இந்த தொடரில் அவருடைய சிறந்த பந்துவீச்சு 6/21 ஆகும்.

டேல் ஸ்டெய்னை ரோல் மாடலாக கொண்டுள்ள மபாகா, தலைசிறந்த வீரரான விராட் கோலியின் விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்த வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். விரைவில் அவர் யு19 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற இமாலய சாதனையை படைப்பார் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

உபைத் ஷா (பாகிஸ்தான்)

பொதுவாக பாகிஸ்தான் அணி பல தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை யு19 உலகக்கோப்பையில் அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் அவர்கள் எல்லோரும் அப்படியே சர்வதேச அணிக்குள் நுழைவார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அது அணிக்குள் இருக்கும் அரசியலா என்றெல்லாம் தெரியாது, ஆனால் நடப்பு யு19 உலகக்கோப்பையையே தன்னுடைய வேகப்பந்துவீச்சால் கலக்கிவரும் உபைத் கானை நிச்சயம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து வெளியில் வைக்கவே முடியாது என்பது நிச்சயம்.

ubaid shah

தொடக்க வீரர்களின் ஸ்டம்புகளை எல்லாம் காற்றில் பறக்கவிடும் உபைத் கான் வேகத்திலும் மிரட்டிவருகிறார். இவர் தற்போது பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கும் நஷீம் ஷாவின் தம்பி ஆவார். நடப்பு உலகக்கோப்பையில் ஐந்து போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், 10.52 சராசரியில் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிராக ஐந்து விக்கெட்டுகளை (5/44) எடுத்தார். இது அவர்களின் அரையிறுதி இடத்தைப் பிடிக்க உதவியது. இப்போதே உபைத் ஷாவை அணிக்குள் எடுக்க பல அணிகள் முயற்சித்துவருகின்றன.

சௌமி பாண்டே (இந்தியா)

இந்தியாவின் இடது கை ஸ்பின்னரான சௌமி பாண்டே, நடப்பு யு19 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னராக இருந்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் மேட்ச் வின்னிங் பந்துவீச்சை வீசிவரும் இவருடைய பந்துவீச்சு சராசரி வெறும் 6.62 ஆகும். இது இந்த உலகக்கோப்பையில் எந்தவொரு பந்துவீச்சாளரும் வைத்திருக்கும் அதிகபட்ச சராசரியாகும். இந்தியாவின் பேட்டிங்கிற்கு டாப் ஆர்டர்கள் 5 பேர் இருக்கின்றனர் என்றால், பந்துவீச்சில் முதல் ஆளாய் சௌமி பாண்டே கலக்கிவருகிறார்.

Saumy Pandey

ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் வரிசையில் ஒரு சிறந்த இடது கை ஸ்பின்னராக உருமாறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொடரில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் சௌமி, மபாகா மற்றும் உபைத் ஷா இருவருக்கும் அடுத்த இடத்தில் நீடிக்கிறார்.

ஹக் வெய்ப்ஜென் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ஹக் வெய்ப்ஜென், அட்டகாசமான சில ரன்களை போர்டில் போட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு முக்கியமான சூப்பர் சிக்ஸ் மோதலின் போது, ​வெய்ப்ஜென் 126 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து அசத்தினார். இது ஆஸ்திரேலியாவை 266 ரன்கள் குவிக்க உதவியது.

Hugh Weibgen

ஆஸ்திரேலியா அணியின் லீடிங் ரன் ஸ்கோரராக இருக்கும் அவர் ஐந்து போட்டிகளில் 63.00 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 252 ரன்கள் எடுத்துள்ளார். தொடரில் அதிக ரன் குவித்தவர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஸ்டீவ் ஸ்டோல்க் (தென் ஆப்பிரிக்கா)

ரன்களின் அடிப்படையில் பார்த்தால் ஸ்டீவ் ஸ்டோக்கை விட ஏழு வீரர்கள் முன்னிலையில் உள்ளனர். ஆனால் அவர் வைத்திருக்கும் ஸ்ட்ரைக் ரேட் 148.61 என்பதை மற்ற வீரர்கள் யாரும் நெருங்கவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு ஒரு சிறந்த அதிரடி ஓப்பனரை இந்த யு19 உலகக்கோப்பை கண்டுபிடித்துள்ளது. லீக் சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 232 ஸ்டிரைக் ரேட்டில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 86 எடுத்து அசத்தினார் ஸ்டீவ்.

Steve Stolk

நடப்பு தொடரில் ஐந்து போட்டிகளில் 42.80 என்ற சராசரியில் இரண்டு அரைசதங்கள் உட்ப்ட 214 ரன்கள் குவித்திருக்கும் அவர், 13 பந்தில் அரைசதமடித்து யு19 உலகக்கோப்பையில் புது வரலாற்று சாதனை படைத்தார். ஸ்டீவ் ஸ்டோல்க் ஒரு சிறந்த ஓப்பனிங் பேட்டராக தென்னாப்பிரிக்காவுக்கு மாறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.