2023 Cricket World cup
2023 Cricket World cup  PTI
கிரிக்கெட்

Cricket World Cup | முதல் வாரத்தில் பட்டையைக் கிளப்பிய டாப் 3 பேட்ஸ்மேன்கள், பௌலர்கள்..!

Viyan

2023 ஐசிசி உலகக் கோப்பை வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. அக்டோபர் 5ம் தேதி அஹமதாபாத்தில் தொடங்கிய இத்தொடர் ஒரு வாரத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. ரன் மழை பொழிந்துகொண்டிருக்கும் இத்தொடரில் பௌலர்களும் இணையாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். 10 போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில், அதிக ரன் எடுத்தவர்கள், அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களில் இருப்பவர்கள் யார்?

குவின்டன் டி காக் - 209 ரன்கள்

குவின்டன் டி காக்

இந்த உலகக் கோப்பையில் விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே சதம் அடித்து முரட்டு ஃபார்மில் இருக்கிறார் குவின்டன் டி காக். இந்தத் தொடரோடு ஒருநாள் ஃபார்மட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர், அதற்கு முன் ஒட்டுமொத்தமாக செயல்பட்டுவிடுவது என்ற முடிவில் இருக்கிறார் போல. முதல் போட்டியில் அவர் சதமடித்தபோது, வேன் டெர் டுசன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் சதமடித்து வெளிச்சத்தை அவர் பக்கமிருந்து திருப்பிவிட்டனர். ஆனால் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய பந்துவீச்சை ஆட்டிப்படைத்து இன்னொரு சதமும் அடித்துவிட்டார் அவர். அடுத்த போட்டியில் அந்த அணி நெதர்லாந்தை சந்திப்பதால் ஹாட்ரிக்கும் எதிர்பார்க்கலாம்.

முகமது ரிஸ்வான் - 199 ரன்கள்

முகமது ரிஸ்வான்

உலகக் கோப்பை அரங்கில் மிகப் பெரிய சேஸை பாகிஸ்தான் அணி அரங்கேற்றியதற்குக் காரணமாக அமைந்தார் முகமது ரிஸ்வான். இமாம் உல் ஹக், பாபர் ஆசம் போன்ற சீனியர்கள் சொதப்பினாலும், ரிஸ்வான் அந்த அணியின் தூணாக உருவெடுத்தார். இரண்டு போட்டிகளிலுமே பாகிஸ்தான் டாப் ஆரடர் தடுமாறியபோது களம் கண்ட அவர், ஒரு சதமும் ஒரு அரைசதமும் அடித்திருகிறார். இலங்கைக்கு எதிராக மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்தபோது தசைப்பிடிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டு சிறப்பாக ஆடினார் அவர்.

குசல் மெண்டிஸ் - 198 ரன்கள்

குசல் மெண்டிஸ்

இலங்கை அணி குசல் மெண்டிஸிடம் இத்தனை ஆண்டுகள் என்ன எதிர்பார்த்ததோ அதை மிகப் பெரிய அரங்கில் செய்துகொண்டிருக்கிறார் . இந்தியாவில் வந்து இறங்கியதிலிருந்தே அவர் பேட்டிலிருந்து பந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன. பயிற்சிப் போட்டியில் 158 ரன்கள் விளாசிய அவர், தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக 72 ரன்கள் எடுத்தார். முதல் 10 ஓவர்களிலேயே 8 சிக்ஸர்கள் விளாசினார் அவர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடி சதமும் விளாசினார் . இலங்கை அணி இரண்டு போட்டிகளிலுமே தோற்றிருந்தாலும், மெண்டிஸின் ஃபார்ம் அந்த அணி வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை கொடுக்கிறது.

மிட்செல் சான்ட்னர் - 7 விக்கெட்டுகள்

மிட்செல் சான்ட்னர்

அஹமதாபாத், ஹைதராபாத் போன்ற பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடியிருந்தாலும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி டாப் விக்கெட் டேக்கராக திகழ்கிறார் சான்ட்னர். கொஞ்சம் ரன்கள் வாரி வழங்கினாலும், திடீரென தன் வேகத்தை கூட்டியோ, குறைத்தோ பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட்டுகள் வீழ்த்திவிடுகிறார். நெதர்லாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றவர், அடுத்த 2 போட்டிகளையும் தன் ஐபிஎல் ஹோம் கிரவுண்டான சென்னையில் விளையாடுகிறார். விக்கெட் மழை நிச்சயம் பொழியப்போகிறது.

ஜஸ்ப்ரித் பும்ரா - 6 விக்கெட்டுகள்

ஜஸ்ப்ரித் பும்ரா

உலகக் கோப்பைக்கு முன்பாக பும்ராவின் ஃபிட்னஸ் பற்றி ஏன் அவ்வளவு விவாதங்கள் நடந்தன என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தி நல்ல தொடக்கம் கொடுத்தவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பவர்பிளே, மிடில் ஓவர்கள், டெத் என அனைத்து பகுதிகளிலும் சிக்கனமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக விளங்கி வருகிறார் பும்ரா. பும்ரா முழு ஃபார்மில் இருப்பதே இந்திய ரசிகர்களுக்கு உச்சகட்ட நம்பிக்கை கொடுத்திருக்கிறது.

மேட் ஹென்றி - 6 விக்கெட்டுகள்

மேட் ஹென்றி

இந்த உலகக் கோப்பை தொடங்கியபோது மேட் ஹென்றிக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் லாக்கி ஃபெர்குசன், டிம் சௌத்தி போன்ற சீனியர்களின் காயம் அவருக்கான இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதைப் பயன்படுத்திக்கொண்ட அவர், தன் ஃபார்மை இங்கும் வெளிக்காட்டியிருக்கிறார். இங்கிலாந்து, நெதர்லாந்து இரண்டு அணிகளுக்கு எதிராகவும் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். தன் வேகத்தாலும், துல்லியமான பந்துவீச்சாலும் பவர்பிளேவில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அவர், போல்ட் கொடுக்கவேண்டிய தாக்கத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.