இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியையும், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியையும் வென்றால் இந்தியா 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும்.
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் நாக் அவுட் போட்டிகளை எட்டியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன. ஆனால் சொந்தமண்ணில் விளையாடும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்பில் ஊசலாடி வருகின்றன. கடைசி 1 அரையிறுதி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை என 3 அணிகள் போட்டியிடுகின்றன. எனினும், தற்போது வரை புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 4வது இடத்தைத் தக்கவைத்துள்ளது. நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளைவிட இந்திய அணியின் என்ஆர்ஆர் அதிகமாக இருப்பது இந்தியாவிற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதனால், அரையிறுதி செல்வதற்கான 4வது அணியாக இந்தியாவிற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஆனாலும் இன்று (அக்.23) நியூசிலாந்துடன் மோதும் இந்திய போட்டியின் முடிவுகள்கூட, 4வது அணியாக யார் செல்லக்கூடும் என்பதை நிர்ணயிக்கும். இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியையும், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியையும் வென்றால் இந்தியா 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும்.
ஒருவேளை, நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தி, கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினால் அந்த அணி எந்தச் சிக்கலும் இன்றி 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். எனவே இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். இக்கட்டான சூழலிதான் இந்திய மகளிர் அணி வாழ்வா, சாவா என்கிற நிலையில் களம் இறங்குகிறது. நவி மும்பையின் DY பாட்டீல் மைதானத்தைப் பொறுத்தவரை, இந்தியா இன்னும் இங்கு ஒரு ஒருநாள் போட்டியில்கூட விளையாடவில்லை, இங்கு விளையாடிய எட்டு டி20 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய சீனியர் பேட்டர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் அணியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்லத் தவறியதால், இந்தப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. மேலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளது. அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நடுவரிசையில் இந்திய அணி ரிச்சா கோஷை மட்டுமே பெரிதும் நம்பியுள்ளது. இதைப் போக்க மற்ற வீராங்கனைகளும் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மறுபுறம், கொழும்பில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தின் பின்னணியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியும் இந்தப் போட்டியில் வெற்றிக்காக உழைக்கும்.