நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. பரபரப்பாக நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பதிவுசெய்திருக்கும் இங்கிலாந்து அணி பல ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆவதை தடுப்பதற்காக போராடிவரும் நியூசிலாந்து அணி, முதல்நாளிலேயே 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை குவித்துள்ளது.
இன்றைய நாள் ஆட்டத்தில் 10வது வீரராக களமிறங்கிய 3 சிக்சர்களை விளாசி 10 பந்தில் 23 ரன்கள் அடித்த மூத்த வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அசத்தலான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 3 சிக்சர்களை அடித்த டிம் சவுத்தீ டெஸ்ட் கிரிக்கெட்டில் 98வது சிக்சரை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய டிம் சவுத்தீ, வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரரான க்றிஸ் கெயிலின் அதிக சிக்சர்கள் சாதனையை சமன்செய்துள்ளார்.
இந்த பிரத்யேகமான சிக்சர்கள் பட்டியலில் முதல் 30 இடங்களிலும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே இருந்துவரும் நிலையில், ஒரே ஒரு ஒற்றை பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளார் டிம் சவுத்தீ. அவருக்கு அடுத்த படியாக ஒரு முழுமையான பந்துவீச்சாளராக வாசிம் அக்ரம் 32வது இடத்தில் நீடிக்கிறார்.
தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் டிம் சவுத்தீ, இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் சில சிக்சர்களை அடித்து கிறிஸ் கெயின் சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்:
1. பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து - 133 சிக்சர்கள்
2. பிரண்டென் மெக்கல்லம் - நியூசிலாந்து - 107 சிக்சர்கள்
3. ஆடம் கில்கிறிஸ்ட் - ஆஸ்திரேலியா - 100 சிக்சர்கள்
4. டிம் சவுத்தீ - நியூசிலாந்து - 98 சிக்சர்கள்
5. க்றிஸ் கெயில் - வெஸ்ட் இண்டீஸ் - 98 சிக்சர்கள்