ஐசிசி டிரோபியில் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த பாகிஸ்தான் பவுலர்! ஓய்வு அறிவிப்பு!
பாகிஸ்தான் கிரிக்கெட் தயாரித்த வேகப்பந்துவீச்சாளர்களில் சிறந்த திறமையுடைய பவுலர் என பல்வேறு ஜாம்பவான் கிரிக்கெட்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் முகமது அமீர்.
பாகிஸ்தானுக்காக 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகமான முகமது அமீர், 36 டெஸ்ட், 61 ODI மற்றும் 62 T20I போட்டிகளில் விளையாடி மொத்தமாக 271 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2017 சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் ரோகித் சர்மாவை 0 ரன்னிலும், விராட் கோலியை 5 ரன்னிலும் வெளியேற்றிய அமீர் 3/16 என்ற சிறந்த பந்துவீச்சை பதிவுசெய்து பாகிஸ்தானை ஐசிசி கோப்பைக்கு அழைத்துச்சென்றார்.
அந்த சம்பவத்திற்கு பிறகு உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்கவைத்தவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்ட பொருளாதார வீக்கம் காரணமாக, லீக் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். அதற்குபிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி 2021-ம் ஆண்டு ஓய்வை அறிவித்த அமீர், மீண்டும் 2024 டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியில் கம்பேக் கொடுத்தார்.
2024 டி20 உலகக்கோப்பையில் பழைய அதிரடியான தாக்கத்தை வெளிப்படுத்த முடியாத முகமது அமீர், தற்போது தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டுக்கான ஓய்வை அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்த முகமது அமீர்..
தன்னுடைய ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் முகமது அமீர், “கவனமான பரிசீலனைகளுக்கு பிறகே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவுகள் ஒருபோதும் எளிதானவை அல்ல என்றாலும், தவிர்க்க முடியாதவை என்பதை புரிந்துக்கொள்கிறேன். அடுத்த தலைமுறை வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை புதிய உயரத்திற்கு உயர்த்துவதற்கு இதுவே சரியான நேரம்" என்று கூறி தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார்.
முகமது அமீரின் ஓய்வு அறிவிப்புக்கு முந்தைய நாள் மற்றொரு பாகிஸ்தான் வீரரான இமாத் வாசிம் ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.