வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என வென்ற ஆஸ்திரேலியா அணி, சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று 2-0 என முன்னிலை பெற்ற நிலையில், தொடரை காப்பாற்ற வேண்டிய முயற்சியில் 3வது டி20 போட்டியில் களம்கண்டது ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கேப்டன் ஷாய் ஹோப்பின் அசத்தலான சதத்தால் 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் சேர்த்தது. 6 சிக்சர்கள் 8 பவுண்டரிகள் என விரட்டிய ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ரன்கள் குவித்து அசத்தினார்.
215 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 61 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 5வது வீரராக களத்திற்கு வந்த டிம் டேவிட் 11 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். ’அவரை யாராவது தடுத்து நிறுத்துங்களேன் பா’ என ஹோம் கிரவுண்ட்டில் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் புலம்பினாலும் 37 பந்தில் 11 சிக்சர்கள், 6 பவுண்டரிகளை விளாசிய டேவிட் 102 ரன்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
16.1 ஒவரிலேயே போட்டியை முடித்த டிம் டேவிட் 23 பந்துகளை வெளியில் வைத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில ஆஸ்திரேலியாவிற்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என வெற்றிபெற்றிருக்கும் ஆஸ்திரேலியா தொடரையும் வென்று அசத்தியது. டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆன வெஸ்ட் இண்டீஸ், டி20 தொடரிலாவது ஒயிட்வாஷ் ஆவதை தவிர்க்குமா என்ற கவலையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 16 பந்தில் அரைசதமடித்த டிம் டேவிட், 37 பந்தில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்காக அதிவேகமாக அரைசதம் மற்றும் சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்பு 43 பந்தில் ஜோஷ் இங்கிலீஸ் சதமடித்ததே ஒரு ஆஸ்திரேலியா வீரர் பதிவுசெய்த அதிவேக டி20 சதமாக இருந்தது. அதனை முறியடித்து வரலாறு படைத்துள்ளார் டிம் டேவிட்.