இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதன்படி, கொல்கத்தாவில் தொடங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் (45), கார்ஸ் (31) ஆகியோர் நல்ல ரன்களை எடுத்தனர். பின்னர், ஆடிய இந்திய அணி, விக்கெட்களை தொடர்ந்து இழந்ததுடன் போராட்ட நிலைக்கும் தள்ளப்பட்டது.
என்றாலும் கொஞ்சமும் மனந்தளராத திலக் வர்மா, தனியொருவனாக இருந்து கடைசிவரை இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். 55 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என விளாசிய திலக் வர்மா 72 ரன்கள் அடித்து இந்தியாவை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஒரு த்ரில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
தவிர, புதிய உலக சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் (318) என்ற சாதனையை திலக் வர்மா படைத்துள்ளார். அவர், கடைசியாக விளையாடிய 4 சர்வதேச டி20 போட்டிகளில் 107, 120, 19, 72 ஆகிய ரன்களை ஆட்டமிழக்காமல் எடுத்திருக்கிறார். இதன் ஒட்டுமொத்தம் 318 ரன்கள் ஆகும்.
இந்தப் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேன் 271 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் மற்றும் இந்தியாவின் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தலா 240 ரன்களுடன் 3வது இடத்திலும், டேவிட் வார்னர் 239 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர். அந்த சாதனைகளின் விவரம், இங்கே:
திலக் வர்மா (இந்தியா) - 318 (107*, 120*, 19*, 72*)
மார்க் சாப்மேன் (நியூசிலாந்து) - 271 (65*, 16*, 71*, 104*, 15)
ஆரோன் பின் (ஆஸ்திரேலியா) - 240 (68*, 172)
ஸ்ரேயாஸ் ஐயர் (இந்தியா) - 240 (57*, 74*, 73*, 36)
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 239 (100*, 60*, 57*, 2*, 20)