கிரிக்கெட் உலகில் தி ஜட்ஜ் என போற்றப்படும் இங்கிலாந்தை சேந்த பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் ஸ்மித் காலமானார். இந்நேரம் அவரது சாதனை புத்தகத்தின் சில நினைவு பக்கங்களை புரட்டலாம்.
1980-இன் இறுதியிலும் 90- களிலும் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவர்களில் ஒருவர் ராபின் ஸ்மித். வேகப்பந்து வீச்சாளர்களை வீம்புடன் எதிர்கொண்டு ரன் குவிக்கும் ஆற்றல் படைத்தவர். இவரது ஆட்டத்திறன் அதிசயிக்க வைக்கும். 1990- இல் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ்- க்கு சுற்றுப்பயணம் செய்த போது, கரீபியன் பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு இலகுவான திட்டம் ஒன்றை கையிலெடுத்தனர். ராபின் ஸ்மித்துக்கு பவுன்சர்களாக வீசி பயமுறுத்த முடிவு செய்தனர். எனினும் அஞ்சாமல் விளையாடினார் ராபின்.
ஆண்டிகுவாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அம்புரோஸ், கர்ட்னி வால்ஷ், இயான் பிஷப் ஆகியோர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் எகிறும் பந்துகளை அடுத்தடுத்து வீசினர். இரண்டு ஓவர்களில் 11 பந்துகளை அடுத்தடுத்து பவுன்சர்களாக ராபின் ஸ்மித்தின் தாடையை பந்து தாக்கியது. இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சவால் விடுக்கும் தைரியம் ராபின் ஸ்மித்திடம் தொடர்ந்தது. 1992-ல் உலகக்கோப்பையில் இறுதியாட்டம் வரை முன்னேறிய இங்கிலாந்து அணியில் ஒரு அங்கமாக திகழ்ந்த பெருமை ராபினுக்கு உண்டு.
1993-ல் இங்கிலாந்து அணி இந்திய சுற்றுப்பயணம் வந்தபோது சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணி விளையாடியது. அதுவரை மத்திய வரிசையில் விளையாடி வந்த ராபின் ஸ்மித் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். சுட்டெரிக்கும் வெயிலில் ராபின் ஸ்மித் கூலர் காலர் எனும் குளிரூட்டும் உபகரணத்துடன் விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். 80-ஸ் கிட்ஸ்களுக்கு இன்றளவும் அது மறக்க முடியாத நினைவாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவரான ராபின் ஸ்மித், இங்கிலாந்து அணிக்காக 1988-ஆம் ஆண்டு தொடங்கி 1996 வரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 4 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 1996-ஆம் ஆண்டு ஓய்வு அறிவித்த பின் மனஉளைச்சலுக்கு ஆளான அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகியிருந்த நிலையில் 62 ஆவது வயதில் ராபின் ஸ்மித் காலமானார். அவரது ஸ்டைலான ஆட்டமும், உருவமும் இன்றும் ரசிக்கலாம்...