england vs australia boxing day test cricinfo
கிரிக்கெட்

தொடங்கியது பாக்ஸிங் டே டெஸ்ட்| 51 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெறுகிறது.

Rishan Vengai

மெல்போர்னில் தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 51 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 3 தொடர் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து வெற்றிபெறுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 11 நாட்கள் முடிவிலேயே 0-3 என தோற்ற இங்கிலாந்து 16வது ஆண்டாக ஆஸ்திரேலியாவில் தொடரை இழந்துள்ளது.

தோல்வியால் ஒரு பக்கம் இங்கிலாந்து அணி பெரிய அடியை சந்தித்திருக்கும் நிலையில், 2வது டெஸ்ட் மற்றும் 3வது டெஸ்ட் போட்டிக்கு இடையேயான நாட்களில் ரிசார்ட்டில் அளவுக்கு அதிகமாக குடித்த இங்கிலாந்து வீரர்கள் 4 நாட்களாக போதையில் தள்ளாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குடிபோதையில் இருப்பிடம் செல்ல வழிதெரியாமல் சுற்றிய பென் டக்கெட்டின் வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குடித்துவிட்டு சரியாக பயிற்சி எடுக்காததால் தான் இங்கிலாந்து அணியால் 3வது டெஸ்ட்டில் சரியாக விளையாட முடியவில்லை என விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இன்று 4வது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதிவருகின்றன.

மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

சிறப்பாக பந்துவீசிய ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். களத்தில் உஸ்மான் கவாஜா மற்றும் அலெக்ஸ் கேரி பேட்டிங் செய்துவருகின்றனர்.