aus. w team
aus. w team twitter
கிரிக்கெட்

இறுதிவரை போராடிய இந்திய வீராங்கனைகள்.. 3 ரன்னில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றிய ஆஸி. மகளிர் அணி!

Prakash J

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான 2வது போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

தீப்தி சர்மா

இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, அவ்வணியின் தொடக்க வீராங்கனை போபி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவர் 63 ரன்களில் வீழ்ந்தாலும், அடுத்துவந்த பெர்ரியும் நல்ல களம் அமைத்தார். அவர் 50 ரன்களில் அவுட்டானார். ஆனாலும் பின்னர் வந்த வீராங்கனைகள் அனைவரும் இரட்டை இலக்க ரன்கள் எடுத்து 200 ரன்களைத் தாண்ட வைத்தனர். இதன்மூலம் அவ்வணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையும் படிக்க: பவுண்டரி எல்லைக்கு முன்பு விழுந்த பந்து.. 'சிக்ஸ்' கொடுத்த நடுவர்.. BBL போட்டியில் நடந்த சர்ச்சை!

பின்னர் ஆடிய இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா (34), ரிச்சா கோஸ் (96), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ஆகியோர் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். பின்னர் வந்த கேப்டன் முதல், பிற வீராங்கனைகள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். குறிப்பாக, கேப்டன் ஹர்மன் பிரித் ஹவுர் கொஞ்ச நேரம் நிலைத்து நின்று ஆடியிருந்தால்கூட, இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். அவர் 5 ரன்னில் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார்.

ind. w team

ஆனால், தீப்தி சர்மா தன்னால் முடிந்தவரை போராடினார். எனினும், அவருக்குத் துணையாய் மறுமுனையில் யாரும் நிலைத்துநிற்கவில்லை. இதனால், இந்திய அணி 3 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இறுதியில் இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்து 3 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இறுதிவரை போராடிய தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 2 வெற்றிகளைப் பதிவுசெய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

இதையும் படிக்க: உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளி... மீரா மாஞ்சி வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி