பவுண்டரி எல்லைக்கு முன்பு விழுந்த பந்து.. 'சிக்ஸ்' கொடுத்த நடுவர்.. BBL போட்டியில் நடந்த சர்ச்சை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிபிஎல் தொடர் போட்டி ஒன்றில் மைதானத்தின் கூரைமீது பட்டு விழுந்த பந்துக்கு, நடுவர்கள் சிக்ஸ் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பிபில் லீக் தொடர்
பிபில் லீக் தொடர்ட்விட்டர்

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவைப்போல், உலகின் பிற நாடுகளிலும் வெவ்வேறு பெயர்களில் அப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவிலும் பிக்பாஷ் லீக் (BBL) என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி தற்போது அங்கு நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற இதன் 18-வது லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் அடிலெய்டு அணி பேட்டிங் செய்தது. மூன்றாம் வரிசையில் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக, அவர் அடித்த பந்து ஒன்று, மைதானத்தின் மேற்கூரையைத் தொட்டு, பின் பவுண்டரி எல்லைக்கு சில அடி தூரம் முன்பு வந்து விழுந்தது. அதாவது, இப்போட்டி நடைபெற்ற மெல்போர்ன் டாக்லாண்ட்ஸ் அரங்கம், ஆடுகளத்தை மறைக்கும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, போட்டிகளில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இப்படியான மைதானங்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், நேற்று கிறிஸ் லின் அடித்த பந்து மேற்கூரையைத் தொட்டப்படி விழுந்தது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக இப்படி, ஒரு பேட்டர் அடிக்கும் பந்து ஏதேனும் பொருள்மீது பட்டு கீழே விழுந்தால் அந்தப் பந்தை 'டெட் பால்' (Dead ball) என நடுவர் அறிவித்து, மீண்டும் பந்து வீச்சாளரை பந்துவீசச் சொல்வார். ஆனால், இந்த முறை களத்தில் இருந்த நடுவர்கள் புரூஸ் ஆக்சன்ஃபோர்ட் மற்றும் ஜெரார்ட் அபூட் சில நிமிடங்கள் விவாதம் செய்து மூன்றாம் நடுவருடன் ஆலோசித்து, அதை ’சிக்ஸ்’ என அறிவித்தார்கள்.

இதையும் படிக்க: போலீஸ் வாகனத்தை திருடி செல்ஃபி... அடுத்த 6 மணி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்..!

இதனால் ரசிகர்கள் குழம்பிப் போயினர். அதாவது, பவுண்டரி கோட்டைத் தாண்டாத பந்துக்கு எப்படி சிக்ஸ் என ரன்கள் கொடுக்க முடியும் என்பது அவர்களின் விவாதமாக மாறியது. ஆனால், பிக் பாஷ் லீக் தொடரில் இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் சில ஆடுகளங்கள் மழைக்கு நடுவே நிறுத்தாமல் போட்டிகளை நடத்தும் வகையில் மேற்கூரையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சிலசமயம் பந்து உயரமாகச் செல்லும்போது அந்தக் கூரையில் படுவதால் மீண்டும் பந்துவீச வேண்டி உள்ளது. அதனால், சிக்ஸ் அடிக்கும் வாய்ப்பு பறிபோவதாக அதிருப்தி இருந்தது. இந்த நிலையில், இனி மேற்கூரையில் பந்து பட்டு கீழே விழுந்தால் அது சிக்ஸரா அல்லது டெட் பாலா என நடுவரே முடிவுசெய்து கொள்ளலாம் என விதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

கிறிஸ் லின்
கிறிஸ் லின்twitter

அதாவது, ’பந்து மேற்கூரையில் படும் இடம், பவுண்டரி எல்லைக்கு அருகே இருந்தால் இது சிக்ஸ் சென்று இருக்கக் கூடும்’ என நடுவரே முடிவுசெய்து கொள்ளலாம். அப்படி இல்லாமல் பாதி தூரத்திலேயே பந்து மேலேபட்டு கீழே விழுந்தால் அது டெட் பால் என அறிவிக்கப்படும். அந்த வகையிலேயே கிறிஸ் லின் அடித்த பந்தை, ’சிக்ஸ்’ என நடுவர்கள் அறிவித்துள்ளனர். எனினும், ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ’ஒருவேளை பந்து உயரே சென்றால் அதை கேட்ச் பிடிக்கக்கூட வாய்ப்பு உள்ளது. அப்படி என்றால் அம்பயர் பாதி தூரத்தில் பந்து கீழே விழுந்தால், மைதானத்தில் நிற்கும் எதிரணி ஃபீல்டரால் இது கேட்ச் பிடிக்கப்பட்டு இருக்கும் என முடிவுசெய்து அவுட் கொடுக்கலாமா’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com