அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் தொடரில், இந்தியாவும் பாகிஸ்தானும் பிப்ரவரி 15ஆம் கொழும்புவில் மோத உள்ளன.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரிலும் கடந்த உலகக் கோப்பையைப்போலவே 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். லீக்கில் 40 போட்டிகள், சூப்பர் 8 சுற்றில் 12 போட்டிகள், 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 55 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
அந்த வகையில், டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது.
தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. பிரிவு 2இல் வங்கதேசம், இத்தாலி இங்கிலாந்து, நேபாள், மேற்கிந்தியத் தீவு ஆகிய அணிகளும் பிரிவு 3இல் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும், பிரிவு 4இல் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அமீரகம் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கும் லீக் போட்டிகள், மார்ச் 8ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7ஆம் தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12ஆம் தேதி டெல்லியிலும், 15ஆம் தேதி பாகிஸ்தானை கொழும்புவிலும் எதிர்கொள்ளும் இந்திய அணி, கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை 18ஆம் தேதி அகமதாபாத்தில் சந்திக்கிறது. இத்தொடரின் விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.