sky x page
கிரிக்கெட்

கோப்பையுடன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்ற IND.. தன்னைத்தானே அறைந்து கொண்ட SKY!

இந்தியா சாம்பியன் ஆன பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னைத்தானே கன்னத்தில் செல்லமாய் தட்டிக் கொண்டார்.

Prakash J

இந்தியா டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னைத்தானே கன்னத்தில் செல்லமாய் தட்டிக் கொண்டார். இந்திய அணி, அஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டது.

டி20 உலகக்கோப்பையை மூன்றாவது முறையாக இந்திய அணி வென்று சாதித்திருப்பதே, இன்று உலகம் முழுவதும் பேசப்படும் செய்தியாக இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பின்னால் இந்திய அணியின் ஒட்டுமொத்த உழைப்பும் இருக்கிறது. அதிலும் சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் உழைப்பிற்குப் பின்னால், அதைத் திறம்பட வழிநடத்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பும் அடங்கியிருக்கிறது. வெற்றிக்குப் பிறகு, அவர் தன்னைத்தானே கன்னத்தில் செல்லமாய் தட்டிக் கொண்டார்.

கோப்பையை வென்றபிறகு பரிசளிப்பு விழாவில் பேச வந்த சூர்யகுமார் யாதவ், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் பட்டியலில் தாமும் இணைந்துவிட்டோம் என்பதை நம்ப முடியாமல், தன்னைத்தானே கன்னத்தில் சிலமுறை மெதுவாக அறைந்துகொண்டார். இது ஒரு கனவா அல்லது நிஜமா என்பதை உணர்ந்து கொள்வதற்காக அவர் செய்த இந்த நெகிழ்ச்சியான செயல் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்தது.

வெற்றி குறித்துப் பேசிய சூர்யகுமார் யாதவ், "இந்த உணர்வில் இருந்து வெளியே வர எனக்குச் சிறிது நேரம் ஆகும். ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். 2024 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்த நீண்ட பயணம் தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். 2024 உலகக் கோப்பையில் நாங்கள் பின்பற்றிய நல்ல விஷயங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க நினைத்தோம். அதனை அணி வீரர்கள் அனைவரும் மிகச் சரியாகச் செய்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோர் உலகக் கோப்பையுடன் நள்ளிரவில் அனுமன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அகமதாபாத் மைதானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள புகழ்பெற்ற அனுமன் டேக்ரி கோயிலுக்குச் சென்றனர். அங்கு உலகக் கோப்பையை வைத்து அவர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.