நியூசிலாந்து உடனான தோல்வி குறித்து சூர்யகுமார் யாதவ் பதில் x
கிரிக்கெட்

நியூசிலாந்து உடன் தோல்வி| ’வேண்டுமென்றே தான் அப்படி விளையாடினோம்’ - சூர்யகுமார் பதில்

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டி குறித்து பேசியிருக்கும் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேண்டுமென்றே தான் அப்படி விளையாடினோம் என கூறியுள்ளார்.

Rishan Vengai

நியூசிலாந்து அணியுடன் நடந்த டி20 போட்டியில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சூர்யகுமார் யாதவ், 'நாங்கள் வேண்டுமென்றே அப்படி விளையாடினோம், இது ஒரு சவாலாக இருந்தது' என்று கூறினார். இந்திய அணியின் முயற்சி உலகக் கோப்பை அணிக்கான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கத்துடன் அமைந்ததாக கூறினார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று உள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.

நியூசிலாந்து

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் 3 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.

தோல்வி குறித்து சூர்யகுமார் பதில்..

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 216 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 82 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் 15 பந்தில் அரைசதமடித்த ஷிவம் துபே 7 சிக்சர்களை பறக்கவிட்டு 23 பந்தில் 65 ரன்கள் அடித்து அச்சுறுத்தினார். முடிவில் அவரும் நான் ஸ்ட்ரைக்கில் நின்றிருந்தபோது பவுலரின் கையில் பட்ட பந்து ஸ்டம்ப்பை தாக்க அவுட்டாகி வெளியேறினார். முடிவில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது.

சஞ்சு சாம்சன்

இந்தசூழலில் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ”இன்று நாங்கள் வேண்டுமென்றே ஆறு பேட்ஸ்மேன்களை விளையாடினோம். ஐந்து முழுமையான பந்து வீச்சாளர்களை நாங்கள் பயன்படுத்தினோம், அதன்மூலம் எங்களை நாங்களே சவால் செய்ய விரும்பினோம். உதாரணமாக, நாங்கள் 200 அல்லது 180 ரன்களைத் துரத்தும்போது விரைவாக இரண்டு அல்லது மூன்று பேர் விக்கெட் இழந்தால், அது எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பினோம். ஆனால் நாள் முடிவில் எல்லாம் பரவாயில்லை.

உலகக் கோப்பை அணியில் இருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பினோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறோம். ஆனால் ஒருவேளை 180 அல்லது 200 ரன்களை சேஸ்செய்யும்போது இரண்டு அல்லது மூன்று விக்கெட்டுகள் விழுந்தால், நாங்கள் எப்படி பேட்டிங் செய்கிறோம் என்பதைப் பார்க்கவும், வீரர்கள் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். எனவே இது ஒரு நல்ல சவால்” என்று பேசியுள்ளார்.