துனித் வெல்லாலகேவை சந்தித்து ஆறுதல் சொன்ன சூர்யகுமார் யாதவ் web
கிரிக்கெட்

தந்தையை இழந்த இலங்கை வீரருக்கு ஆறுதல் சொன்ன சூர்யகுமார்.. இணையத்தில் வீடியோ வைரல்!

சில நாட்களுக்கு முன்பு இலங்கை அணியின் இளம் வீரரான துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார்.

Rishan Vengai

நேற்று நடைபெற்ற 2025 ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதிய போட்டி சமனில் முடிந்தது. பின்னர் சூப்பர் ஓவரில் முடிவை எட்டிய போட்டியில், இலங்கையை எளிதாக வீழ்த்தி இந்தியா வெற்றியை ருசித்தது.

இந்தியா - இலங்கை

நடப்பு ஆசியக்கோப்பை தொடரின் சிறந்த போட்டியை இரண்டு அணி வீரர்களும் வழங்கிய நிலையில், போட்டி முடிந்தபிறகு சமீபத்தில் தந்தையை இழந்த 22 வயது இளம் வீரரான துனித் வெல்லாலகேவை நேரில் சந்தித்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..

வல்லாலகேவை சந்தித்த சூர்யகுமார்..

22 வயதான வெல்லாலகே இந்த மாத தொடக்கத்தில் தனது தந்தை சுரங்க வெல்லாலகேவை இழந்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை குரூப் நிலை போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வீசிய ஒரே ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி தொடர்ந்து 5 சிக்சர்களை விளாசினார். இதன்மூலம் அந்த ஓவரில் 32 ரன்கள் கொடுக்கப்பட்டது.

இந்தப் போட்டியை இலங்கையில் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தந்தை இழப்பை தொடர்ந்து இலங்கைக்கு சென்ற துனித், அடுத்தபோட்டியில் பங்கேற்க மீண்டும் யுஏஇ திரும்பினார். ஆனால் அந்தப்போட்டியில் அவரால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இந்தசூழலில் போட்டிக்கு பிறகு வெல்லாலகேவை சந்தித்த இந்திய சூர்யகுமார் யாதவ் அவருக்கு ஆறுதல் சொல்லி தட்டிக்கொடுத்தார். சூர்யகுமாரின் அறிவுரைகளை கேட்டுக்கொண்ட வெல்லாலகே அதை ஏற்றுக்கொண்டது வீடியோவில் பார்க்கமுடிந்தது. இந்தவீடியோவை சோனி ஸ்போர்ட்ஸ் பகிர்ந்திருக்கும் நிலையில், ரசிகர்கள் அதை பகிர்ந்து வருகின்றனர்.