suryakumar no rivalry comment on india vs pakistan web
கிரிக்கெட்

’இனிமேல் பாகிஸ்தானை இந்தியா உடன் ஒப்பிடாதீர்கள்..’ அசிங்கப்படுத்திய கேப்டன் சூர்யகுமார்!

இதற்குபிறகு இந்தியா-பாகிஸ்தான் மோதலை ரைவல்ரி என்று சொல்லாதீர்கள், சரிசமமான அணிகளுக்கு இடையே இருப்பதுதான் ரைவல்ரி என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் விமர்சித்து பேசியுள்ளார்.

Rishan Vengai

இந்தியா-பாகிஸ்தான் மோதலை இனிமேல் ரைவல்ரி என்று கூறாதீர்கள், நாங்கள் பாகிஸ்தானை விட மேம்பட்டு விளங்குகிறோம் என்று சூர்யகுமார் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆசியக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் 172 ரன்களை வெற்றிகரமாக விரட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

ind vs pak

ஒருகட்டத்தில் 190-200 ரன்களை பாகிஸ்தான் எட்டும் என்ற நிலை இருந்தபோது, பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் இந்திய தொடக்க ஜோடியை பிரிக்கவே முடியவில்லை. அபிஷேக் சர்மா-சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கே 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியது.

ind vs pak

இந்நிலையில் போட்டி முடிந்தபிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானை இந்தியாவுடன் ஒப்பிடாதீர்கள் என்று மோசமாக விமர்சித்து பேசினார்.

ரைவல்ரி என்று குறிப்பிடாதீர்கள்..

போட்டிக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இடம், இந்தியா உடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானின் தரம் குறைவாக இருக்கிறதா என்று பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ், “சார், இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகளை ஒரு ரைவல்ரி என்று அழைப்பதை இப்போது நிறுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" என தெரிவித்தார்.

மீண்டும் அந்த பாகிஸ்தான் செய்தியாளர் குறுகிட்டு ‘ரைவல்ரி பற்றி கேட்கவில்லை, தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையிலான தரநிலை வேறுபட்டுள்ளதா?’ என்று தன்னுடைய கேள்வியை தெளிவுபடுத்தினார்.

அதற்கு பதிலளித்த சூர்யா, “சார், ரைவல்ரி மற்றும் தரநிலை அனைத்தும் ஒன்றுதான். இப்போது ரைவல்ரி என்றால் என்ன? இரண்டு அணிகள் 15 போட்டிகளில் விளையாடி முடிவு 8-7 என்று சரிசமமான நிலையில் இருந்தால், அது ஒரு போட்டி. இங்கே அது 13-1 அல்லது 12-3 அல்லது ஏதோ ஒன்றாக பெரிய இடைவெளியுடன் இருக்கிறது. இதில் எந்த போட்டியும் இல்லை" என்று சூர்யகுமார் யாதவ் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் அணி கடைசியாக ஆசியக்கோப்பையில் 2022-ம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தியிருந்தது. மொத்தமாக 15 டி20 போட்டிகளில் இவ்விரு அணிகள் மோதியிருக்கும் நிலையில் இந்தியா 12 போட்டிகளிலும், பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.