sunil gavaskar - rishabh pant web
கிரிக்கெட்

"Stupid, Stupid, Stupid.." மோசமான ஷாட் மூலம் வெளியேறிய ரிஷப் பண்ட்... Live-ல் சாடிய கவாஸ்கர்!

நல்ல தொடக்கம் கிடைத்த போதும் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் மோசமான ஷாட் மூலம் வெளியேறிய ரிஷப் பண்ட்டை முட்டாள் என கடுமையாக சாடினார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் தொடரின் வெற்றியை உறுதிசெய்யப்போகும் முக்கியமான போட்டியாக 4வது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடந்துவருகிறது.

நிதிஷ்குமார் ரெட்டி

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஸ்டீவ் ஸ்மித் (140 ரன்கள்), லபுசனே (72 ரன்கள்), சாம் கான்ஸ்டாஸ் (60 ரன்கள்) முதலிய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்தது.

அதற்குபிறகு விளையாடிய இந்திய அணி நிதிஷ்குமார் ரெட்டியின் அபாரமான சதத்தின் உதவியால் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது.

ரிஷப் பண்ட்டை முட்டாள் என சாடிய சுனில் கவாஸ்கர்..

கடந்த 2021 பார்டர் கவாஸ்கர் டிரோபியின் ஹீரோவாக ஜொலித்த ரிஷப் பண்ட், இந்தமுறை 5 இன்னிங்ஸ்களில் வெறும் 87 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆஸ்திரேலியா அணி இந்தியாவை விட சற்று பலமாக காணப்படுவதற்கு ரிஷப் பண்ட்டின் மோசமான ஆட்டமும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

ரிஷப் பண்ட்

டாப் ஆர்டரில் ஜெய்ஸ்வால், கோலி, கேஎல் ராகுல் அவுட் ஆகிவிட்டாலே ஆட்டம் முடிந்துவிட்டது போன்ற பிம்பம் இந்த தொடர் முழுவதும் இருந்துவருகிறது. ஆனால் ரிஷப் பண்ட் என்ற ஒரு மேட்ச் வின்னர் இந்தியாவிற்கு இந்த தொடரில் கிடைக்காதது பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

பண்ட்

இந்நிலையில் இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது ரிஷப் பண்ட் 3 பவுண்டரிகளை விரட்டி நல்ல தொடக்கத்தை பெற்றார். ஆனால் போலண்ட்டுக்கு எதிராக ஒரு மோசமான ஷாட் ஆடிய ரிஷப் பண்ட் 28 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இந்தியாவை முன்னின்று எடுத்துவர வேண்டிய இடத்தில் இருந்த பண்ட் இப்படி அவுட்டானது இந்திய ரசிகர்களை மட்டுமில்லாமல் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரையும் அதிர்ச்சியடை செய்தது.

இந்நிலையில் வர்ணனைபெட்டியில் இருந்த கவாஸ்கர், முட்டாள், முட்டாள், முட்டாள் என மூன்றுமுறை அழுத்தமாக கூறி கடுமையாக சாடினார். தொடர்ந்து பேசிய அவர், “முந்தைய பந்தில் அந்த ஷாட்டை தவறவிட்டீர்கள், அதற்காகவே ஆஸ்திரேலியா இரண்டு ஃபீல்டர்களை அங்கு நிறுத்தியது. ஆனால் அதன்பிறகும் நீங்கள் அந்த ஷாட்டை விளையாடினீர்கள், இதுபோலான ஆட்டத்தை ஆடும் இடத்தில் இந்தியா இல்லை. அணியின் சூழ்நிலையையும் புரிந்துகொள்ள வேண்டும், இது உங்களுடைய இயல்பான ஆட்டம் இல்லை. நீங்கள் உங்களுடைய விக்கெட்டை கிஃப்ட்டாக கொடுத்துள்ளீர்கள். முட்டாள்தனமான ஷாட்டை விளையாடினீர்கள், நீங்கள் இந்திய டிரெஸ்ஸிங் அறைக்கு செல்லாமல், வேறு எங்காவது செல்லுங்கள்” என்று கடுமையாக சாடினார். கவாஸ்கர் பேசிய காணொளி தற்போது வைரலாகி வருகிறது.