இந்தியாவின் பும்ரா 100 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பவுலர் என முன்னாள் ஜாம்பவான் புகழாரம் சூட்டினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் பும்ராவின் பந்துவீச்சு இந்தியா மீதிருந்த அழுத்தத்தை குறைத்தது. இர்பான் பதான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் பும்ராவை பாராட்டினர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சனின் 89 ரன்கள் அதிரடி ஆட்டத்தால் 253 ரன்கள் குவித்தது.
254 ரன்கள் என்ற இமாலய இலக்கு என்றபோதும் இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியின் இளம்வீரர் பெத்தெல் 48 பந்தில் 105 ரன்கள் அடித்து மிரட்டினார். கடைசி போராடிய இங்கிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
கடைசி 3 ஓவர்களுக்கு 45 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து அணியின் பெத்தல் மற்றும் சாம் கரன் இருவரும் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தபோது 18வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா இந்தியா மீதிருந்த அழுத்தத்தை குறைத்தார். அவருடைய பவுலிங் அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபேவிற்கு இருந்த அழுத்தத்தை நீக்கியது. பும்ராவின் பந்துவீச்சை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், “பும்ரா 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பந்துவீச்சாளர்” என புகழாரம் சூட்டினார்.
அதேபோல இர்பான் பதான், “500 ரன்கள் எடுத்த ஆட்டத்தில், எனது ஆட்ட நாயகன் ஜஸ்பிரித் பும்ரா. 8.25 எக்கானமி உடன், இரண்டு அணிகளிலும் அவர்தான் வித்தியாசமாக இருந்தார்" என பாராட்டியுள்ளார்.