கவாஸ்கர், அபிஷேக் சர்மா எக்ஸ் தளம்
கிரிக்கெட்

”4 பந்தை Waste பண்ணுங்க..” அபிஷேக் சர்மாவிற்கு அறிவுரை சொன்ன கவாஸ்கர்!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், அபிஷேக் சர்மாவிற்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

Prakash J

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து தடுமாறி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவிற்கு முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அடுத்தகட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாக ஆடி முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முதலிடம் பிடித்த அணிகளான இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே ஆகியன குரூப் 1லும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் குரூப் 2விலும் இடம்பிடித்துள்ளன. இதற்கிடையே, இந்தத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து சோடை போய் வருகிறார். உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, இந்தியாவின் மிகப்பெரிய போட்டி வெற்றியாளர்களில் ஒருவராக இந்தப் போட்டியில் நுழைந்தார்.

அபிஷேக் சர்மா

ஆனால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இதுவரை முடிந்த லீக் போட்டிகளான அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் முறையில் வெளியேறி சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதிரடியாக ஆடி ரன் குவிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பே அவருக்குப் பின்னடைவாக மாறியுள்ளது. முதல் பந்திலிருந்தே பெரிய ஷாட்களை ஆட முயற்சி செய்து அவர் தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வருகிறார். இதையடுத்து அவர்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. அவருடைய பேட்டிங் ஃபார்ம் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவே மறைமுகமாகச் சாடியிருந்தார்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், அபிஷேக் சர்மாவிற்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார். அவர், ”அபிஷேக் சர்மா ஒரு திறமையான வீரர். ஆனால், தற்போது அவர் மீதான எதிர்பார்ப்புகள் அவருக்குப் பாரமாக மாறியுள்ளன. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தால் நிலைமை மாறியிருக்கும். இப்போது அவர் ஒரு பெரிய சிக்ஸர் அடிப்பவர் மற்றும் அதிரடி வீரர் என்ற பிம்பத்தைத் தக்கவைக்கப் போராடுவது அவரது ஆட்டத்தில் தெரிகிறது. அவர், களமிறங்கியதும் முதல் பந்திலேயே பெரிய ஷாட்களை ஆட முயற்சிக்கக் கூடாது. முதலில் ஒரு சிங்கிள் எடுத்து ரன் கணக்கைத் தொடங்குவதே மிக முக்கியம்.

சுனில் கவாஸ்கர்

இன்னிங்ஸின் தொடக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டும். முதல் நான்கு பந்துகளை ரன் ஏதும் எடுக்காமல் வீணடித்தாலும் கவலையில்லை. களத்தில் சிறிது நேரம் செலவழித்தால் தானாகவே ரன்கள் வரும். ஒருமுறை ரன் கணக்கைத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தலாம். ஆனால், தொடக்கத்திலேயே கட்டாயப்படுத்தி பெரிய ஷாட்களை ஆடக் கூடாது. மைதானத்தில் நிலைத்து நிற்பது ஒரு பேட்டருக்குத் தன்னம்பிக்கையைத் தரும். அதன் பிறகு அவர் இழந்த ரன்களை எளிதாக ஈடுகட்ட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.