ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவிருக்கும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் அணியிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல் என 3 விக்கெட் கீப்பர்கள் இருந்தும் சஞ்சுவுக்கு இடம் கிடைக்கவில்லை..
துருவ் ஜுரெலின் சமீபத்திய ஃபார்மை கருத்தில்கொண்டு அவருக்கு இடமளிக்கப்பட்டாலும், ஒருநாள் போட்டியில் 57 சராசரியுடன் சதம் மற்றும் 3 அரைசதங்கள் விளாசியிருக்கும் சஞ்சு சாம்சனுக்கு ஏன் இடமில்லை என்பது புரியாமலே இருந்துவருகிறது. கடைசியாக விளையாடிய தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்திருந்தார் சஞ்சு சாம்சன்..
சஞ்சு சாம்சன் ஒருநாள் அணியில் இடம்பிடிக்காதது குறித்து தன்னுடைய விரக்தியை வெளிப்படுத்தியிருக்கும் சுப்ரமணியம் பத்ரிநாத், “நான் சஞ்சு சாம்சனுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.. கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்திருக்கிறார், அவருடைய ஒருநாள் சராசரி 57ஆக இருக்கிறது.. ஆனாலும் அவருக்கு இந்திய ஒருநாள் அணியில் இடம்கிடைக்கவில்லை.. அவர் என்ன தவறுசெய்தார் என்றும் எனக்கு புரியவில்லை..
ரிஷப் பண்ட் அணியில் இருப்பதற்கு கூட என்னால் காரணம் புரிந்துகொள்ள முடிகிறது.. ஆனால் துருவ் ஜூரெல் எந்த அடிப்படையில் அணியில் இருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை.. சஞ்சு சாம்சனின் இடத்தில் நானும் இருந்திருக்கிறேன்.. நம்முடைய பெயர் அணியில் இடம்பெறாதா என பார்த்து ஏமாறும் ஒவ்வொருமுறையும் மனசு உடையும்” என பேசியுள்ளார்..
முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே பேசுகையில், “நான் இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் என்ற ஒரு பெயரை தவறவிடுகிறேன்.. அவர் கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்திருக்கிறார், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை என்றாலும், இந்த தொடரில் இடம்பெற்றிருக்க வேண்டும்.. நீங்கள் 3 வடிவங்களில் விளையாடும்போது வீரர்களை தேர்வுசெய்வதில் குழப்பம் அடைகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்..