2026 டி20 உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டப்ஸ், ரிக்கல்டன் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறவில்லை. டெவால்ட் ப்ரேவிஸ் உள்ளிட்ட புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் நோக்கம் முதல் உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்பதாகும்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 5 அணிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனாக களமிறங்கவிருக்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாத இடைவெளியே இருக்கும் சூழலில், ஒவ்வொரு அணிகளும் 15 பேர்கள் கொண்ட ஸ்குவாடை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ஓமன் முதலிய அணிகள் ஸ்குவாடை வெளியிட்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்கா அணியும் 15 பேர் கொண்ட உலகக்கோப்பை அணியை அறிவித்துள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த டிகாக், மார்க்ரம், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ஜே, கேசவ் மஹாராஜ் முதலிய 7 வீரர்கள் 2026 டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
ஆனால் கடந்த உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்த ஸ்டப்ஸ், கோட்ஸீ, ரிக்கல்டன் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, கார்பின் போஷ், டெவால்ட் ப்ரேவிஸ், டோனி டி சோர்ஸி, டோனோவன் ஃபெரீரா, ஜார்ஜ் லிண்டே, க்வேனா மபாகா மற்றும் ஜேசன் ஸ்மித் முதலிய புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு நடந்ததுபோல் டிரிஸ்டன் ஸ்டப்ஸை பேட்டிங் ஆர்டரை மாற்றி களமிறக்கி அணியிலிருந்தே வெளியேற்றிவிட்டார்கள். 2009, 2014 என இரண்டு அரையிறுதிக்கும், 2024-ல் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் உலகக்கோப்பையை வெல்லும் நோக்கத்தில் களம்காணவிருக்கிறது.