இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பைக்கான தொடரில் பங்கேற்று விளையாடியது. ரோகித் சர்மா, விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற 3 மூத்தவீரர்கள் பயணப்பட்ட அனுபவமில்லாத அணி, இங்கிலாந்து மண்ணில் தொடரை 2-2 என சமன்செய்து அசத்தியது.
ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் முடிவும் 5வது நாள் வரை சென்று ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. தொடரை நிர்ணயம் செய்த 5வது டெஸ்ட் போட்டி இறுதிநாள் வரை சென்று இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து சமன்செய்தது.
இந்த சூழலில் சிறந்த தொடரின் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வுசெய்துள்ளார் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். அவருடைய சிறந்த அணியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைத்துள்ளது.
நடந்துமுடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த தொடராக அமைந்தது. இந்த ஒரு தொடரில் மட்டும் 21 சதங்களும், 50 அரைசதங்களும், 7000-க்கும் மேற்பட்ட ரன்களும் அடிக்கப்பட்டன. பந்துவீச்சை பொறுத்தவரையில் 1860.4 ஓவர்கள் வீசப்பட்டு 172 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன.
இந்நிலையில் தொடரின் சிறந்த பிளேயிங் லெவன் அணியை தேர்வுசெய்திருக்கும் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட், அவருடைய அணியில் 5 இந்திய வீரர்களை சேர்த்துள்ளார். அதிலும் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், அவர்களுக்கு பதிலாக இந்தியாவின் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கொடுத்துள்ளார். அதேபோல பவுலர்களாக சிராஜ் மற்றும் பும்ராவை தேர்வுசெய்துள்ள அவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை தேர்வுசெய்துள்ளார்.
ஆல்ரவுண்டராக ஜடேஜாவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கொடுத்துள்ளார் பிராட். வாஷிங்டன் பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதால் அவருடைய அணியில் வாஷிங்டன் இடம்பிடித்துள்ளார். இவ்வணிக்கு கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்த அணியில் சுப்மன் கில்லுக்கு இடமில்லாதது பேசுபொருளாக மாறியுள்ளது.
சுப்மன் கில், ஜடேஜா ஏன் இடம்பெறவில்லை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கும் பிராட், ஜோ ரூட்டும், சுப்மன் கில்லும் ஒரே இடமான 4வது இடத்தில் விளையாடுவதால் அவருக்கு பதிலாக ஜோ ரூட்டை தேர்வுசெய்தேன். அதேபோல ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா, ஸ்டோக்ஸுக்கு நிகரான வீரர், இந்த தொடரில் ஸ்டோக்ஸ் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவரை தேர்வுசெய்ததாகவும் கூறியுள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி: ஸ்டூவர்ட் பிராட் சிறந்த 11
1. கேஎல் ராகுல்
2. யஷஸ்வி ஜெய்ஸ்வால்
3. ஒல்லி போப்
4. ஜோ ரூட்
5. ஹாரி ப்ரூக்
6. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்)
7. ரிஷப் பண்ட்
8. வாஷிங்டன் சுந்தர்
9. ஜோப்ரா ஆர்ச்சர்
10. சிராஜ்
11. பும்ரா