ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என தொடரானது 1-1 என சமநிலையில் இருந்துவருகிறது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டியானது பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் நடந்துவருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்த ஆஸ்திரேலியா அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாம் கான்ஸ்டாஸ் மற்றும் காவாஜா இருவரும் அரைசதமடித்து திடமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
அதிலும் 19 வயதேயான சாம் கான்ஸ்டாஸ் ஜஸ்பிரித் பும்ரா ஓவரில் 2 சிக்சர்களை அடித்தது மட்டுமில்லாமல் 65 பந்துகளுக்கு 60 ரன்களை அடித்து ஒரு ட்ரீம் அறிமுக போட்டியை கொண்டிருந்தார்.
அதற்குபிறகு பேட்டிங் செய்ய வந்த லபுசனேவும் அரைசதமடிக்க, மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் அபாரமான சதத்தை பதிவுசெய்தார். லபுசனே 72 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்களும் அடித்து அசத்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்களை குவித்துள்ளது. இந்திய பவுலர்களில் பும்ரா 4 விக்கெட்டுகள், ஜடேஜா 3 விக்கெட்டுகள், ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் மற்றும் வாசிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆஸ்திரேலியாவை தொடர்ந்து மிகப்பெரிய டோட்டலை சேஸ் செய்துவரும் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 86 ரன்களுடன் விளையாடிவருகிறது.
தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 3 ரன்களிலும், கேஎல் ராகுல் 24 ரன்களிலும் வெளியேறிய நிலையில், 38 ரன்களுடன் ஜெய்ஸ்வால், 19 ரன்களுடன் விராட் கோலி இருவரும் விளையாடிவருகின்றனர்.
இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் சதங்களை அடித்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித், இந்தியாவிற்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்திருந்த ஜோ ரூட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஜோ ரூட் இந்தியாவிற்கு எதிராக 10 டெஸ்ட் சதங்கள் அடித்திருந்த நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 11வது டெஸ்ட் சதமடித்து அசத்தியுள்ளார்.