டர்வினில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த டெஸ்டில், முதல் போட்டியில் அப்செட் வெற்றி பெற்ற வங்கதேசம் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் தீவிர பதிலடிக்கு சரிந்தது. ஸ்டார்க் முதல் 22 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து வங்கதேசத்தை 64 ரன்னுக்கு ஒழித்தார். பின்னர் ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளால் ஆஸ்திரேலியாவை 165/8 என கட்டுப்படுத்தினாலும், க்ரீன் 51 ரன்களால் ஆஸ்திரேலியாவுக்கு வலுவான முன்னிலை கிடைத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவில் உள்ள டர்வின் மைதானத்தில் 22 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்த ஆஸ்திரேலியா, 20 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசத்திற்கு எதிராக டர்வின் மைதானத்தை தேர்வுசெய்தது.
வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற முடிவில் ஆஸ்திரேலியா எடுத்த அந்த முடிவு, ஒரு வரலாற்று அப்செட்டிற்கு அவ்வணியை அழைத்துச்சென்றது. முதல் டெஸ்ட்டில் பேட்டிங், பவுலிங் என மிரட்டிய வங்கதேச அணி, ஆஸ்திரேலியாவை அனைத்து விதத்திலும் டாமினேட் செய்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது.
1-0 என தொடரில் முன்னிலை வகித்த வங்கதேச அணி, 2வது போட்டியில் வென்றால் முதல்முறையாக ஆஸ்திரேலியா ஒயிட்வாஷை சந்திக்கும் என்பதால் இரண்டாவது போட்டி மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது.
பரபரப்பாக இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் வங்கதேச வீரர்களை மைதானத்தில் நிற்கவே விடாமல் விக்கெட் வேட்டை நடத்தினார். ’வரான் அவுட்டாகுறான் ரிப்பீட்டு’ என்பது போல 64 ரன்னுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது வங்கதேசம். பந்துவீச்சில் மிரட்டிய மிட்செல் ஸ்டார்க், 10 ஓவரில் 6 ஓவர்களை மெய்டனாக வீசி வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமில்லாமல் முதல் 22 பந்துகளிலேயே ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கும் வங்கதேசம் பந்துவீச்சில் பதிலடி கொடுத்தது. 41 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 148 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எப்படியும் விரைவில் ஆல்அவுட்டாகி விடுவார்கள் என நினைத்தபோது, முதல் டெஸ்ட்டை போலவே சிறப்பாக பேட்டிங் செய்த காம்ரூன் க்ரீன் இந்த போட்டியிலும் நிலைத்துநின்று அரைசதமடித்து வங்கதேசத்திற்கு தலைவலியாக மாறினார்.
முதல் நாள் ஆட்டமுடிவில் ஆஸ்திரேலியா 165/8 ரன்கள் சேர்த்துள்ளது. க்ரீன் 51 ரன்னிலும், நாதம் லயன் 10 ரன்னிலும் களத்தில் நீடிக்கின்றனர். ஆஸ்திரேலியா அணி தற்போதைய நிலையில் 101 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வங்கதேசத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷோரிஃபுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.