1983, 1985 ஐசிசி பட்டங்களை வீரராக வென்ற சீக்கா, 2011 உலகக்கோப்பையை தேர்வுக்குழு தலைவராக கைப்பற்றிய பயணத்தை விவரிக்கிறார். ரஞ்சிக்கோப்பை, துலீப், இரானி கோப்பைகளில் கேப்டனாக சாதித்ததையும், இந்திய அணியில் தன் அதிரடி பாணிக்கு கிடைத்த சுதந்திரத்தையும் நினைவுகூரும் அவர், மீண்டும் சேர்மேனாக வந்தால் 2027 உலகக்கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்கும் என நம்பிக்கையுடன் பேசுகிறார்.
1983 உலகக்கோப்பை வென்றதற்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்தியா உலகக்கோப்பை வெல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட 2011 உலகக்கோப்பை தான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பையாக இருந்திருக்கும், இந்திய கிரிக்கெட்டிற்காக அனைத்தையும் செய்த சச்சினிடம் ஒரு உலகக்கோப்பை கூட அதுவரை இல்லை என்பது பெரிய குறையாக சொல்லப்பட்டது.
ஒருவேளை கோப்பையே இல்லாமல் சச்சின் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்த ரசிகர்களுக்கு, தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று 28 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாட்டத்தை கொண்டுவந்தது.
சொந்தமண்ணில் கோப்பை வெல்வது, அதிலும் ப்ரைம் ஸ்டேடியமான மும்பை வான்கடே மைதானத்தில் கோப்பை வெல்வது, சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணித்தது என 2011 உலகக்கோப்பை இந்திய ரசிகர்களின் உணர்வுகளோடு பிண்ணப்பட்ட தருணமாக இன்றுவரை இருக்கிறது.
இந்திய நாடே கொண்டாடி தீர்த்த உலகக்கோப்பை வெற்றிக்கு அப்போதைய தேர்வுக்குழு தலைவராக இருந்த சீக்காவும் ஒரு முக்கிய காரணியாக இருந்தார். பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் உத்வேகம் நிறைந்த இளம்வீரர்கள் என ஒரு சிறந்த கலவையாக 2011 உலகக்கோப்பை இந்திய அணி இருந்தது.
ஒரு வீரராக 1983 உலகக்கோப்பை மற்றும் 1985 சாம்பியன்ஸ் டிரோபியை வென்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தேர்வுக்குழு தலைவராகவும் 2011 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தார். இந்தசூழலில் தான் தற்போது உரையாடல் ஒன்றில் பேசியிருக்கும் சீக்கா, தற்போதும் தன்னால் உலகக்கோப்பையை வென்றுக்கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
சமீபத்திய உரையாடல் ஒன்றில் தன்னுடைய கிரிக்கெட் பயணம் குறித்து மனம்திறந்து பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “ஆரம்பத்தில் நான் அதிரடியாக விளையாடிய போது ‘யார்ரா இவன் காட்டான் மாதிரி சுத்துறான்னு சொன்னாங்க’ இப்போ உலகமே காட்டான் மாதிரிதான் சுத்துது. இந்தியாவிற்காக நான் விளையாடியது கடவுளின் ஆசீர்வாதத்தால் நடந்தது. நான் ரஞ்சிக்கோப்பையில் மலைபோல ரன்குவித்துவிட்டு வரவில்லை, ஆனால் பாகிஸ்தான் போன்ற விசிட்டிங் டீம் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் அவர்களின் பந்துவீச்சுக்கு எதிராக அதிரடியாக ரன்குவித்திருக்கிறேன். துலீப் டிராபி, இரானி கோப்பை போன்ற தொடர்களில் எல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன். இந்திய அணியில் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு பிளான் இருக்கும், ஆனால் எனக்கு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதால் அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. என்னுடைய கரியரில் 45 தடவைக்கு மேல் நல்ல தொடக்கம் கிடைத்தும் 30 ரன்களில் அவுட் ஆகியுள்ளேன்.
இந்திய அணிக்காக கேப்டன் செய்யும் பொறுப்பு தானாகவே வந்தது. ஆனால் என்னுடைய கேப்டன்சி ரெக்கார்ட் அதுவரையில் சிறப்பாகவே இருந்தது. 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு ரஞ்சிக்கோப்பை வென்றபோது கேப்டனாக நானே இருந்தேன், செமிஃபைனலுக்கு முன் சர்வதேச போட்டிக்காக சார்ஜா சென்றுவிட்டேன். அதேபோல கேப்டனாக துலீப் டிராபி, இரானி கோப்பை நான் கேப்டனாக வென்றுள்ளேன். 1983 உலகக்கோப்பை வீரராகவும், 2011 உலகக்கோப்பை சேர்மேனாகவும் வென்றுள்ளேன். 2011 உலகக்கோப்பையில் நிறைய பார்ட் டைம் ஆல்ரவுண்டர்கள் வேண்டுமென ஒரு சிறந்த கலவையாக அணியை தேர்வுசெய்தோம். அதுதான் என்னுடைய பிளானாக இருந்தது, இப்போது வேண்டுமானால் தேர்வுக்குழு சேர்மேன் பொறுப்பை கொடுக்க சொல்லுங்கள் 2011 போல 2027 உலகக்கோப்பையை வென்று கொடுக்கிறேன்” என கலகலப்பாக பேசியுள்ளார்.